வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:15:36 (30/10/2018)

கானல்நீராகிப்போன உச்சகட்ட பாதுகாப்பு- தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளருடன் இரண்டு காவலர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். 

பத்திரிகையாளர்

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்யுதனந்த் சாஹு

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை தண்டேவாடா (Dantewada) மாவட்டத்தில் சில வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகச் செய்தி சேகரிக்க டெல்லியிலிருந்து சில தூர்தர்ஷன் பத்திரிகையாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளனர். அவர்கள் அரன்பூர் காட்டுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது காலை 11:20 மணியளவில் திடீரென மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். மாவோயிட்டுகளுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு காவலர்கள் மற்றும் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் என மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். 

இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப்

இறந்த ஒளிப்பதிவாளர் அச்யுதனந்த் சாஹு (Achyuthanand Sahu) என்றும் காவலர்கள் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப் (Rudra Pratap) மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மங்லு (Manglu) என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சென்ற மற்ற பத்திரிகையாளர்கள் அரன்பூர் காவல்நிலையத்தில் பத்திரமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதலுக்குப் பல பத்திரிகை நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் கண்டம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசியுள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், ``மாவோயிஸ்டுகளில் செயல் கண்டிக்கத்தக்கது. இறந்த ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் குடும்பத்துக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம். அனைத்து ஆபத்தான சூழ்நிலைகளில் தைரியமாகச் சென்று செய்தி சேகரிக்கும் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் மரியாதைகள்” எனத் தெரிவித்துள்ளார்.