`மேல்முறையீட்டில் ஒன்றும் இல்லை'- தொடங்கும் முன்னரே  ஷஹாபுதீன் வழக்கை முடித்த உச்ச நீதிமன்றம் | There is nothing in this appeal - says supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (30/10/2018)

கடைசி தொடர்பு:16:28 (30/10/2018)

`மேல்முறையீட்டில் ஒன்றும் இல்லை'- தொடங்கும் முன்னரே  ஷஹாபுதீன் வழக்கை முடித்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ஷஹாபுதீன் மற்றும் மூவர் மீதான கொலைவழக்கில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் அமைச்சர் ஷஹாபுதீன் மற்றும் அவரது அடியாட்கள், 2004-ம் ஆண்டு சகோதரர்கள் சதிஷ் மற்றும் கிரிஷ் ரோஷன் ஆகியோரைப் பணம் தர மறுத்ததால் ஆசிட் ஊற்றி கொலை செய்தனர். இந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சி அவர்களது தம்பி ராஜிவ் ரோஷன், பல்வேறு மிரட்டல்களுக்கு இடையில், ஷஹாபுதீனுக்கு எதிராகச் சாட்சி சொல்லச் செல்லும் வழியில் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மூவர் கொலைக்காக, அவருக்குக் குற்றம் உறுதி செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல் மற்றும் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஷஹாபுதீனுக்கு ஆதரவாகப் பல மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். ஆனால், அவர்கள் தங்கள் வாதத்தைத் தொடங்கும் முன்னதாகவே, நீதிபதிகள் நேரடியாக ஒரே ஒரு கேள்வியைக் கேட்டனர். ``சாட்சி சொல்ல வந்த ராஜிவ் ரோஷன் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்? இந்தக் கொலைக்கு தூண்டியவர் யார்?" என்று கேட்டனர்.

உச்ச நீதிமன்றம்

நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்த வழக்கறிஞர் வாதத்தைப் புறக்கணித்து உடனடியாக தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள். அவர்கள் தீர்ப்பில், ``இந்த மேல்முறையீடு தேவையில்லாதது, உயர் நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
பீகார் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதுவும் பேசுவதற்கு முன்னராகவே அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்தது இந்த மூவர் பெஞ்ச். மேலும், உயர் நீதிமன்றம் வழங்கிய அதே தீர்ப்பான, அவர்கள் குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.