வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (30/10/2018)

கடைசி தொடர்பு:20:50 (30/10/2018)

#MeToo விவகாரம்... பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வுக் கொடுத்த பிரபல கல்வி நிறுவனம்!

#MeToo விவகாரத்தில் சிக்கியதால் இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியர் கிரிதர் கட்டாய ஓய்வுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள விவகாரம் கல்வியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேராசிரியர் கிரிதர்

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் புகழ்பெற்ற கல்வி நிறுவனம். இந்த நிறுவனத்தில் வேதியியல் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் கிரிதர் மெட்ராஸ். இவர், இயக்கவியல் சார்ந்த பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய அளவில் எஸ்.எஸ்.பட்நாகர் விருது, சி.எஸ்.ஐ.ஆர் விருது எனப் பல உயரிய விருதுகளும் ஆராய்ச்சி சார்ந்த நிறைய பெல்லோஷிப்களையும் பெற்றிருக்கிறார். 

சர்வதேச அளவில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே 10,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மேற்கோள்களைக் கொண்டவர்களாக உள்ளனர். இந்த வரிசையில் கிரிதரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிகளைப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஆராய்ச்சியில் மேற்கோள் காட்டியுள்ளனர். கிரிதர், 1988-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் இன்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். 1989-ம் ஆண்டு எம்.டெக் படிப்பைச் சென்னை ஐ.ஐ.டி-யிலும், 1993-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 

இவர் மீது இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவி பாலியல் புகார் கூறியிருந்தார். புகாரை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தனது விசாரணை அறிக்கையை இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் அனுராக் குமார், ``கிரிதர் மீது எழுந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று கிரிதரைக் கட்டாய ஓய்வுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார். 

திரைப்படத்துறையில் #MeToo புகார்கள் தினம்தோறும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், கல்வி நிறுவனத்தில் எழுந்த பிரச்னை குறித்து உடனடியாக முடிவு கண்டிருப்பது குறித்து கல்வியாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.