சீருடையில் இல்லாமல் விசாரணை - காவலர்கள் இரண்டு பேர் அதிரடி இடமாற்றம்! | police constables transfer for Inquiry without uniform

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:01:00 (31/10/2018)

சீருடையில் இல்லாமல் விசாரணை - காவலர்கள் இரண்டு பேர் அதிரடி இடமாற்றம்!

கர்நாடக மாநில சுற்றுலாப் பயணிகளிடம் சீருடையில் இல்லாமல் விசாரணை செய்ததாகக் கூறி இரண்டு காவலர்கள் ஆயுதப்படை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காவலர்கள் மாற்றம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்க ராஜபுரத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் ராஜேஷ் என்பவரது தலைமையில் 5 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், 15 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் செல்வதற்காக வருகை தந்தனர். இதற்காகக் கடந்த 22-ம் தேதி புறப்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணம் முடித்துவிட்டு தஞ்சையில் வாடகைக்கு வேன் ஒன்றை வைத்துக்கொண்டு வேளாங்கண்ணி சென்றனர்.

வேளாங்கண்ணியைப் பார்த்துவிட்டு நேற்று மாலை தஞ்சையில் மைசூர் எக்ஸ்பிரஸ் மூலமாக மீண்டும் பெங்களூரு செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, வேளாங்கண்ணியில் மாதா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு நாகப்பட்டினம் வழியாக வரும்போது சோழங்கநல்லூர் என்ற இடத்தில் மாற்று சீருடையில் வந்த போலீஸார் இளவரசன், சங்கர் ஆகியோர் வேனை வழிமறித்து வாகனத்தில் இருந்த டிரைவரைத் தாக்கி அதில் இருந்தவர்களிடம் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வேனில் இருந்த பயணிகள் அனைவரும் சேர்ந்து இரண்டு காவலர்களையும் தாக்கியுள்ளனர். தகவலறிந்து வருகை தந்த சீருடையில் இருந்த மற்ற காவலர்கள், அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களின் நிலைமையை விசாரித்து 5 பெண்கள் உட்பட 10 பேரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியே அனுப்பினார். இந்தத் தகவல் வெளியான நிலையில் சம்பவ இடத்துக்குத் திருவாரூர் கோட்டாட்சியர் முருகதாஸ், திருவாரூர் டி.எஸ்.பி நடராஜன், நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சீருடை இல்லாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்ததாகக் கூறி இரண்டு காவலர்களை ஆயுதபடை காவல்துறைக்கு மாற்றி திருவாரூர் மாவட்ட எஸ்.பி விக்ரமன் உத்தரவு பிறப்பித்தார்.