வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (31/10/2018)

கடைசி தொடர்பு:08:20 (31/10/2018)

கறுப்புச் சட்டைக்கு `நோ’ - கேரள முதல்வர் நிகழ்ச்சியில் டெக்னீஷியனுக்கு நேர்ந்த கதி

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கறுப்புச் சட்டை அணிந்து வந்த ஒருவரை போலீஸார் அனுமதிக்காதது சர்ச்சை கிளப்பியுள்ளது. 

கருப்புச் சட்டை அணிந்திருந்த நபர்

Photto Credit: mediaonetv

கேரள மாநிலம் இந்த மாதம் பல்வேறு விதமான போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நாள் முதல், பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  சபரிமலை கோயில் நடை திறந்திருந்த 5 நாள்கள் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. பக்தர்கள், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

ஆனால் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தது. சபரிமலைக்கு வந்த பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. எனினும் பக்தர்களில் எதிர்ப்பு காரணமாக, பெண்கள் பாதி வழியில் திரும்பினர். 

இந்த நிலையில்தான் நேற்று கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள முதல்வர் பினராயி விஜயன் வந்தார். அவரது வருகைக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அப்போது நிகழ்ச்சிக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்த யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. 

முதல்வர் வருகைக்கு முன்னால் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு  நிகழ்ச்சிக்கு இளைஞர் ஒருவர் வந்தார். அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. அவர் தான் விழாவில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையை இயக்கும் டெக்னீஷியன். வேண்டுமென்றே கறுப்புச் சட்டை அணிந்து வரவில்லை. தற்செயலாக நடந்தது என்று கூறியும் போலீஸார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல், தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்து, அவர் வீட்டில் இருந்து வேறு கலரில் சட்டையை எடுத்து வர, அதன் பின்னர்தான் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். 

போராட்டக்காரர்கள் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்ற அச்சத்தால் காவலர்கள் இவ்வாறு செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.