தீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்! | Tips to spend the Diwali bonus usefully

வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (31/10/2018)

கடைசி தொடர்பு:10:01 (31/10/2018)

தீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்!

போனஸ் தொகை என்பது பரிசாகக் கிடைத்த பணமல்ல, அதுவும் நமது உழைப்புக்கான ஊதியமே என்பதை மனதில்கொண்டு அதற்கான செலவை பயனுள்ள முறையில் திட்டமிட வேண்டும். அத்தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதில்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.

தீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்!

தீபாவளி வந்திடுச்சு! அலுவலகங்களில், தொழிற்கூடங்களில், நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தீபாவளி போனஸ் கொடுப்பார்கள். தீபாவளி போனஸ் என்பது பலருக்கும் ஓராண்டுகால எதிர்பார்ப்பு. அப்படி காத்திருந்து பெற்ற போனஸ் தொகையை செலவழிப்பதில் மிகுந்த கவனம், அக்கறை தேவை. 

தீபாவளி

தற்கால உலகமயமாக்கப்பட்ட சூழலில், செலவழிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. மெகா மால்கள் மட்டுமல்லாது, செல்பேசியில் கட்டை விரல் அழுத்தத்தைக்கொண்டே பொருள்களை வாங்கிக்குவிக்கும் வசதியுடன் ஆன்லைன் விற்பனைத்தளங்களும் போட்டிபோட்டு சலுகைவிலை விற்பனையில் ஈடுபடுகின்றன. விற்பனை முறையில் இதுவும் ஒன்று. இவற்றையெல்லாம் குறைசொல்ல முடியாது. ஆனால், இந்த விற்பனைத் தந்திரங்களில் சிக்காமல் நமக்குத் தேவையான, பயனுள்ள வகையில் நமது போனஸ் பணத்தைச் செலவழிப்பதுதான் சவாலான விஷயம். 

போனஸ் பரிசல்ல, உழைப்பின் ஊதியமே
போனஸ் தொகை என்பது பரிசாகக் கிடைத்த பணமல்ல, அதுவும் நமது உழைப்புக்கான ஊதியமே என்பதை மனதில்கொண்டு அதற்கான செலவை பயனுள்ள முறையில் திட்டமிட வேண்டும். அத்தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதில்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.

அவசரத் தேவைக்கான முதலீடு
அவசரத் தேவைக்குப் பயன்படும்விதமாக மியூச்சுவல் ஃபண்டில் குறுகிய காலத் திட்டங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம். குழந்தைகளின் கல்விச்செலவை மனதில்கொண்டு அதற்கான வருமானம் பெற மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சேமிப்புக்குப் பயன்படும் ஈக்விட்டி லிங்க்டு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன்மூலம் வருமான வரிச்சுமையைச் சற்று குறைத்துக்கொள்ளலாம்.
 
வங்கிக் கடன்களை அடைத்தல்
நீண்ட கால மாதாந்திரச் செலவாக, கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர்க்கடன் போன்றவற்றில் ஏதேனும் இருந்தால், மாதத்தவணையோடு சேர்த்து கூடுதலாக போனஸ் தொகையையும் செலுத்தலாம். பொதுத்துறை வங்கிக்கடன்களில் இப்படி கூடுதலாகச் செலுத்தும் தொகை முழுவதையும் கடன் தொகையைக் கழிக்கப் பயன்படுத்துவார்கள். எனவே, இது கடன் சுமையைக் குறைக்கப் பெரிதும் பயனளிக்கும். தங்க நாணயங்கள், தங்கப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். தங்க நகை அடைமானத்தில் இருந்தால் அதை மீட்பதற்குப் பயன்படுத்தலாம். 

இன்ஷூரன்ஸ் முதலீடு
அடுத்தகட்டமாக, மறைமுக முதலீடாக, இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதுவரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமலிருந்தால் இந்த போனஸ் தொகையை வைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். ஏற்கெனவே, எடுத்திருந்தால் தேவைக்கேற்ப விரிவுபடுத்தலாம். லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தாலும் நல்ல விஷயமே. எதிர்காலத்தில் பயன் தரக்கூடியதாக, குடும்பத்தின் பாதுகாப்புக்குத் தேவையான ஒன்றாக இருக்கும்.

 

நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்
நீண்டகாலமாக மனதில் நினைத்தும் பணவசதியில்லாததால் இன்னமும் நிறைவேற்ற முடியாத, சுற்றுலா, வீட்டு உள்அலங்கார வேலைப்பாடு, வண்ணம் பூசுவது, வாகனம் வாங்குவது போன்று நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாதிருக்கும் ஏதேனும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தால் செய்துமுடிக்கலாம். மேற்கண்ட செலவுகளில் எதற்காவது உங்களது போனஸ் தொகையில் பெரும்பகுதியைப் பயன்படுத்திவிட்டு, சிறு பகுதியை மட்டுமே ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுத்துவது நல்லது.  திட்டமிடல் இல்லாமல் போனால் "கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல" என்ற பாடலுக்கேற்ப கைக்கு வந்ததொகையும் எப்படியெப்படியோ செலவழிந்தபின் இனி அடுத்த போனசுக்காகக் காத்திருக்கும் நிலை வந்துவிடும்.

தீபாவளியை, புகையில்லாத தீபாவளியாகக் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருகிவருவதுபோல, பணச் சிக்கல் இல்லாத, எதிர்காலம் குறித்த பயமில்லாத, பயனுள்ள தீபாவளியாகக் கொண்டாடுவதும் அவசியம்.


டிரெண்டிங் @ விகடன்