வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (31/10/2018)

கடைசி தொடர்பு:10:34 (31/10/2018)

ராணுவத்தில் இருக்கும் நாய்கள் எதற்காக கொல்லப்படுகின்றன?

ஆனால் இந்தியாவில் வயது மூப்பு மற்றும் திறன் குறைவு காரணமாக ராணுவத்தில் இருந்து ஓய்வு பெரும் 8-ல் இருந்து 10 வயதாகக் கூடிய  நாய்களை ஊசி மூலம் இந்திய ராணுவம் கொலை செய்து விடுகிறது.

ராணுவத்தில் இருக்கும் நாய்கள் எதற்காக கொல்லப்படுகின்றன?

னிதனோ, விலங்கோ, பொருளோ எதுவாக இருந்தாலும் அதன் மொத்த பயன்பாட்டுக்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்பது அவர்களின் தேவையைப் பொறுத்தே அமைகிறது. தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அவர்களைச் சார்ந்து வாழ்கிற வாழ்க்கையே இங்கு இருக்கிற எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. ஓய்வுக் காலம் ஒவ்வொன்றும் அதனதன் வாழ்வியலைப் பொறுத்து மாறுபடும். ராணுவத்தில் பணியில் இருக்கிற நாய்கள் இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபடுகிறது. 

இந்திய ராணுவம் மற்றும் நாய்கள்

உலகின் எல்லா நாடுகளின் ராணுவத்திலும் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாய்கள் தங்களது பணிக் காலம் முடிந்ததும் என்ன ஆகின்றன என்பது பல நாடுகளுக்கும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது. ராணுவத்தின்  குறிப்பிட்ட சில பிரிவுகளில் பயன்படுத்தப்படும் நாய்களைக் கொல்லும் பழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. ஆனால், பில் கிளின்டன் அதிபராக இருந்தபொழுது நாய்களைக் கொல்லாமல் அவற்றை வளர்ப்பு பிராணியாக வளர்க்கலாம் என அறிவித்தார். அதன்படி ராணுவ நாய்களை வளர்க்க விரும்புவோர் அமெரிக்காவின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய் கேட்டு விண்ணப்பிக்கிறவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பிறகே நாய்கள் வளர்ப்பதற்கு வழங்கப்படுகின்றன. நாய்களை வளர்க்க விரும்புவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதன்படி வீட்டில் ஐந்து வயதுக்குக் குறைவானவர்கள் இருந்தால் வளர்ப்பதற்கு ராணுவ நாய்கள் கொடுக்கப்படுவதில்லை. மேலும், வளர்ப்பு நாய்களாக தேர்ந்தெக்கப்படும் நாய்கள் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாய், வீட்டில் வளர்ப்பதற்கு உகந்ததா என அதன் நடவடிக்கைகள் குறிப்பெடுக்கப்படுகின்றன. அதன் பிறகே விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ராணுவத்தில் நாய்களுக்குப் பயிற்சியளிக்கும் வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு நாய்களைத் தத்தெடுக்கும் முறையும் அமலில் இருக்கிறது. 

ஆனால், இந்தியாவில் வயது மூப்பு மற்றும் திறன் குறைவு காரணமாக ராணுவத்தில் இருந்து ஓய்வு பெரும் 8-ல் இருந்து 10 வயதாகக் கூடிய  நாய்களை ஊசி மூலம் இந்திய ராணுவம் கொலை செய்து விடுகிறது. ராணுவத்தில் பணிபுரிந்த நாய்களுக்கு ராணுவ தளவாடங்கள், பாதைகள், வெடிமருந்துகளைக் கண்டறியும் திறன் இருப்பதால் அவை ஒருவேளை எதிரிகளின் கைகளில் கிடைக்க நேர்ந்தால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்பதால் அவை கொல்லப்படுவதாக தெரிவித்திருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் நாய்களைக் கொல்லும் முறை அமலிலிருக்கிறது. சில நாடுகளில் மருந்துகள் மூலம் கொலை செய்வார்கள். மருந்தை ஊசி மூலம் நாய்களின் உடலுக்குள் செலுத்துகிறார்கள். மருந்து செலுத்தப்பட்டதும் நாய் உறக்க நிலைக்குச் சென்றுவிடுகிறது. உறக்கத்தில் இருக்கும்பொழுதே செலுத்தப்பட்ட மருந்து நாயின் இதயம், மூளை போன்ற உறுப்புகளைச் செயலிழக்கச் செய்து விடுகிறது. உலகின் பல நாடுகளிலும் இந்த முறையே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாய்கள் வலி இல்லாமல் இறப்பைச் சந்திக்கின்றன. மனிதர்களில் கருணைக்கொலை செய்யப்படும் மனிதர்களுக்கும் இந்த முறையே பயன்படுத்தப்படுகிறது. மேலும் உடல்நலன் குறைந்த நாய்களையும், காயமடைந்த நாய்களையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள். சிகிச்சையில் நாயின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு கொல்லப்பட்டு விடுகின்றன. 

Mudhol Hound


ராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்ற நாய்கள் பல துறைகளிலும் பயிற்சியளிக்கப்பட்ட பிறகே ராணுவத்தில் அனுமதிக்கப்படுகின்றன. வெடிகுண்டுகளைக் கண்டறிவது, எதிரிகளின் தடவாளங்களைக் கண்டறிவது, ஆயுதங்களைக் கண்டறிவது, பாதைகளைக் கண்டறிவது போன்ற பல ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெஃபர்ட்ஸ், கிரேட் சுவிஸ் மலை நாய்கள் மற்றும் லாப்ரடோர்ஸ் போன்ற நாய்கள் பயிற்சியளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, எந்தவொரு நோய்களாலும் நாய்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. கீழ்ப்படிதல், சுற்றுப்புற பாதுகாப்பு, வெடிமருந்துகள் மற்றும் இலக்குகளைக் கண்டறிதல், ஆபத்தை உணர்தல், தாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது முதன்முதலாக இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகிற Mudhol Hound வகையைச் சேர்ந்த நாய்களை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு சோதனை முயற்சிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. சகிப்புத்தன்மை, கூர்மை, மற்றும் சுறுசுறுப்பு ஆகியவை முதோல் ஹவுண்ட்ஸிற்கு இருக்கிற சில குணங்களாகும். முதோல் வகை நாய்கள்  நோய் எதிர்ப்பு சக்தி உடையதாகவும்,  கடுமையான வெப்பமண்டல நிலைமைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டவைகளாகவும் உள்ளன. முரட்டுத்தனமாக  கடித்தல் மற்றும் அதிக பார்வை திறன் இருப்பதாக அறியப்பட்ட இவ்வகை நாய்கள் தற்போது சோதனை மற்றும் சரிபார்ப்புக்காக ஜம்மு மற்றும் காஷ்மீரைப் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாய்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அவை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்