வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (31/10/2018)

கடைசி தொடர்பு:11:45 (01/11/2018)

`அந்தத் திக் திக் 45 நிமிடங்கள்...!’ - நக்சல் தாக்குதலில் சிக்கிய தூர்தர்ஷன் செய்தியாளர்

`சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய 45 நிமிடத் தாக்குதல் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்' என தூர்தர்ஷன் செய்தியாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

நக்சல்

Credits - AP

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நேற்று நடத்திய தாக்குதலில் தேர்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரில் நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. நவம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு, டிசம்பர் மாதம் வாக்கு எண்ணப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர்கள் குழு தந்தேவாடா மாவட்டத்துக்கு விரைந்தனர். நில்வாயா பகுதியில் கடந்த 20 வருடங்களாக மக்கள் ஓட்டுப்போடவில்லை. எனவே, அந்த ஒரு செய்தியாளர், கேமராமேன், லைட்டிங் உதவியாளர்கள் விரைந்துள்ளனர். அவர்களுடன் காவல்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். அப்போது திடீரென நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த சாஹீ மற்றும் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மற்ற ஊழியர்கள் உயிர் பிழைத்தனர். என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது என தூர்தர்ஷன் செய்தியாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தீரஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ``தந்தேவாடா மாவட்டத்தில் 2 நாள்களாக தேர்தல் குறித்த செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்தோம். அப்போது நில்வாயா பகுதியில் கடந்த 20 வருடங்களாக மக்கள் வாக்களிப்பதில்லை என்ற தகவல் வந்தது. எனவே, எங்கள் குழு அங்கு செல்வது எனத் தீர்மானித்தோம். காவல்துறையினர் பாதுகாப்போடு இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு விரைந்தோம். சாலையில் வாகனத்தை நிறுத்திவைத்து விட்டு எங்களுக்குத் தேவையான ஷாட்களை எடுத்துக்கொண்டிருந்தோம்.

அச்சுதானந்த சாஹூ தான் அதை ஷூட் செய்துகொண்டிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் மரத்தில் இருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை நீக்கினர். அதை சாஹீ கேமராவில் ஷூட் செய்துகொண்டிருந்தார். திடீரென சாஹூ தரையில் விழுந்தார். ஒன்றும் புரியவில்லை பிறகுதான் அவரது உடலிலிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டேன். சாலையின் இடது பக்கத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்தோம். அங்கிருந்த சாக்கடையில் உருண்டு விழுந்தோம். லைட்டிங் உதவியாளர் ஷர்மாவும் கீழே விழுந்துவிட்டார். 45 நிமிடங்கள் துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. 200க்கும் மேற்பட்ட நக்சல்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். எங்களுக்கு அருகில் வந்து தோட்டாக்கள் விழுந்தன. கடவுள் அருளால் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

நல்ல வேளையாக தந்தேவாடா மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அபிஷேக் காவல்துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைவாக வந்தார். பதில் தாக்குதலையடுத்து நக்சல்கள் காடுகளுக்குள் சென்றனர். இந்தச் சம்பவம் தேர்தல் பணியில் உள்ள மற்ற தூர்தர்ஷன் செய்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எங்களுக்கு சமூகப் பாதுகாப்பும் இல்லை, எந்தக் காப்பீடும் இல்லை. நாங்கள் இறந்த பிறகு எங்களது குடும்பத்தை யார் கவனித்துக்கொள்வார்கள் என்றார்.