ரகுராம் ராஜன் சொன்னது உண்மைதான் - உறுதிப்படுத்திய ஆர்.டி.ஐ | RTI reveals Raghuram Rajan sent list of NPA defaulters to Modi

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (31/10/2018)

கடைசி தொடர்பு:20:50 (31/10/2018)

ரகுராம் ராஜன் சொன்னது உண்மைதான் - உறுதிப்படுத்திய ஆர்.டி.ஐ

மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பட்டியலை முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அனுப்பியதைத் தற்போது ஆர்.டி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது. 

ரகுராம் ராஜன்

கடந்த செப்டம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோது செயல்படுத்தியவை குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோதே பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன் என குறிப்பிட்டிருந்தார். இதில், ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகம் என மட்டுமே குறிப்பிட்டிருந்தார். முன்னாள் பிரதமரா, தற்போதைய பிரதமரா எனத் தெரிவிக்கப்படாமல் உள்ளது எனப் பலர் விவாதம் நடத்தினர். 

இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, ஆங்கில செய்தி ஊடகமான 'தி வயர்' (The Wire) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல்செய்தது. தற்போது, ஆர்.டி.ஐ அளித்த தகவலின்படி, ரகுராம் ராஜன் மோசடிப் புள்ளிகளின் பட்டியலை பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அனுப்பினார் என்பது உறுதியாகியுள்ளது. ஆர்.பி.ஐ படி 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி, ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், அதே கடிதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி அலுவலகத்துக்கும் அனுப்பட்டுள்ளதாகத்  தெரியவந்துள்ளது. அவர் அனுப்பிய பட்டியலில் உள்ளவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரகுராம் ராஜன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.