வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (31/10/2018)

கடைசி தொடர்பு:12:37 (01/11/2018)

96 வயதில் 98 சதவிகித மார்க் - யார் இந்தக் கார்த்தியானி அம்மா?

கேரளாவில் 96 வயதான பாட்டி ஒருவர் 98 சதவிகித மார்க் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

கார்த்தியாயினி அம்மா

இந்தியாவில் அதிக அளவு எழுத்தறிவு உள்ள மாநிலமாகக் கேரளம் திகழ்ந்து வருகிறது. இதை 100 சதவிகிதமாக மாற்ற வேண்டும் எனக் கேரள மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அனைத்து வயதிலும் எழுத்தறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி அளிக்கும் வகையில் `அக்ஷ்ர லக்ஷம்' என்ற திட்டம் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதியவர்கள் முதல் பல்வேறு வயது உடைய எழுத்தறிவு இல்லாதவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டி வருவதால் மாநிலம் முழுவதும் 2,086 பயிற்சி மையங்களைக் கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் கல்வி படிப்பவர்களுக்கு எழுத்து தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 7-ம் தேதி நடந்த 4-ம் வகுப்பு நிகரான தேர்வில் 96 வயதான கார்த்தியானி என்பவர் 98 சதவிகித மார்க் எடுத்து அசத்தியுள்ளார். கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலை அவர் எழுதியுள்ளார். 

யார் இந்த கார்த்தியாயினி?

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர்தான். கார்த்தியானி அம்மா என அழைக்கப்படும் இவர், `அக்ஷ்ர லக்ஷம்' திட்டத்தில் பயிலும் 40,000 அதிகமானவர்களில் அதிக வயதான நபர். இதனால் கேரளாவில் இவர் ஏற்கெனவே பிரபலம். சிறு வயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாக இவரால் படிக்க முடியவில்லை.

சிறிய வயதிலேயே, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த இவருக்குப் 6 பிள்ளைகள். கணவரும் சீக்கிரமாக இறந்துவிடப் பிள்ளைகளை வளர்க்கவே, இவருக்கு நேரம் சரியாக இருந்தது. காலம் கடந்த சென்ற பின் 60 வயதான இவரது மகள் மூலமாக `அக்ஷ்ர லக்ஷம்' திட்டத்தில் இணைந்துள்ளார். இதன் பின்னரே கல்வி பயில்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். ``இத்திட்டத்தில் இணைந்ததால் நிறைய விஷயங்களைப் பயின்று வருகிறேன். தற்போது என்னால் படிக்கவும் எழுதவும் முடிவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வு எளிதாகவே இருந்தது" எனத் தேர்வு குறித்துச் சிலாகிக்கும் கார்த்தியானி அம்மா, எனது 100 வயதுக்குள் 10வது வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். தன் உழைப்புக்கு ஏற்றப் பலனாக நாளை கேரள தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பினராயிடமிருந்து பரிசுகள் பெறவுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த கேரளமும் கார்த்தியானி அம்மாவைப் பாராட்டி வருகிறது.

இந்த வயதிலும் கல்வி அறிவைப் பெறுவதில் ஆர்வம் காட்டும் கார்த்தியானி அம்மாவை நாமும் பாராட்டுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க