போனுக்குப் பதிலாக சோப்பு... அமேசான் இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை | Case filed Against Amazon India Head for customer gets soap instead of phone

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:07:42 (01/11/2018)

போனுக்குப் பதிலாக சோப்பு... அமேசான் இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை

மேசான் இணையதளத்தில் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனுக்குப் பதிலாகச் சோப்பு அனுப்பப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமேசான்

மாதிரிப்படம்

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வணிகம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பொருள்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆன்லைன் இணையதளங்களில் ஆர்டர் செய்யும் பொருள்கள் பெரும்பாலான சமயங்களில் கைகளுக்கு சரியாக வந்து சேர்ந்து விடும். ஆனால், சில நேரங்களில் வேறு விதமாக அமைந்து விடுவதும் உண்டு. பார்சலைப் பிரித்துப் பார்த்தால் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் இருக்கும். ஸ்மார்ட்போன்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு இதுபோன்று சில சமயங்களில் நடைபெறுவதுண்டு. அதுபோன்ற ஒரு விவகாரம் ஒன்றில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஸ்ரா கிராம காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காவல் நிலைய வட்டத்தில் உள்ள ஒருவர் அமேசான் இணையதளத்தில் மொபைல் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். கடந்த 27-ம் தேதி அதற்கான பார்சல் அவருக்கு வந்திருக்கிறது. ஆனால், அதற்குள்ளே போனுக்குப் பதிலாக சோப்பு இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின்படி அமேசானின் இந்தியா பிரிவு தலைவர் அமித் அகர்வால், கொரியர் நிறுவனத்தின் இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் டெலிவரி செய்தவர் என மொத்தம் நான்கு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய குற்றவியல் பிரிவு பிரிவுகள் 420, 406 மற்றும் 120B என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உறுதி செய்திருக்கும் அமேசான் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.