வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:04 (01/11/2018)

அதிகரிக்கும் காற்று மாசுபாடு... தனியார் வாகனங்களைத் தடைசெய்யக் காத்திருக்கும் டெல்லி!

டெல்லியில் கடந்த வாரம் முதல் காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (AQI) என்று சொல்லப்படும் காற்று மாசுபாடு விகிதம் 0 முதல் 100 வரை இருப்பது ஆபத்தில்லை. 300 வரை இருப்பது ஆபத்து. அதைக் கடந்தால் மிக ஆபத்து என்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. ஆனால், இந்நேரத்தில் டெல்லியின் காற்று மாசு விகிதம் 400-ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக டெல்லியில் தீபாவளி சமயத்தின்போது மக்கள் வெளியே வரமுடியாத அளவு காற்று படுமோசமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தேசிய மாசு கட்டுப்பாட்டு ஆணையம்.

காற்று மாசுபாடு

இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை கட்டுமானங்களை நிறுத்தி வைப்பது; டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கத் தடை; செங்கல் சூளைகளை மூட வேண்டும்; குப்பைகளை எரிக்கக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

``டெல்லியில் மாசுபாடு குறையவில்லை என்றால் தனியார் வாகனங்களைத் தடைசெய்ய முடிவெடுத்துள்ளோம். சில தினங்களுக்கு மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்" என்று தேசிய மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் புரி லால் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி 2016-ம் ஆண்டு மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுத்தமான காற்றில்லாமல் மரணித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.