வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:06 (01/11/2018)

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை!

திருப்பதி

திருப்பதியில் கடந்த காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வேதஸ்தானம் தடைவிதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. 

திருப்பதி கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் இதுவரை வழங்கப்பட்டுவந்தது. தவிர கோயிலைச் சுற்றியுள்ள பல நூறு கடைகளிலும், பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வந்தது. இதனால், இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமா? எனக் கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக திருப்பதியில் உள்ள உணவகம் மற்றும் பிற கடை உரிமையாளர்களிடம் கோயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. 'சுற்றுச்சூழல் மாசுபடுவது, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது, புற்றுநோய் பாதிப்பு ஆகியவற்றைத் குறைக்கவே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. உணவு சாப்பிடுவது மற்றும் தேநீர் அருந்துவது உட்பட எல்லாத் தேவைக்குமான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கும் உறுதியாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா எனத் தேவஸ்தான சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். மீறி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தும் கடைகளுக்கு கணிசமான தொகை அபராதமாக விதிக்கப்படும்' எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.