வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (01/11/2018)

கடைசி தொடர்பு:13:06 (01/11/2018)

தொழில் செய்ய ஏற்ற சூழல்: 77-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தொழில்

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவது, அந்நிய முதலீடுகள் தொடர்பான அரசின் கொள்கைகள், ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதுதொடர்பான புதிய பட்டியலை உலகவங்கி நேற்று வெளியிட்டது. இதில் கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. 190 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2017-ம் ஆண்டு இந்தியா 100-வது இடத்திலிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 142 வது இடத்தில் இருந்தது. பா.ஜ.க அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா 46-வது இடத்தையும், பாகிஸ்தான் 136-வது இடத்தையும் பிடித்துள்ளன.