வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (01/11/2018)

கடைசி தொடர்பு:11:22 (01/11/2018)

நள்ளிரவில் உயர்ந்தது சமையல் எரிவாயு விலை!

மானிய விலையில் வாங்கும் சிலிண்டர் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மானியத்துடன் வாங்கும் சிலிண்டர்களின் விலை 2 ரூபாய் 94 காசுகள் அதிகரித்துள்ளது. மேலும், மானியம் இல்லாமல் வாங்கும் சிலிண்டர்களின் விலை 60 ரூபாயாக  அதிகரித்துள்ளது. இந்தப் புதிய விலை மாற்றம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, நள்ளிரவில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘சர்வதேச அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதும் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களுமே சிலிண்டர் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம்’ என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜி.எஸ்.டியின் விளைவாலும் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் மானிய விலையில் 505 ரூபாய் 34 காசுகளுக்கு ஒரு சிலிண்டர் விற்கப்படுகிறது. அதுவே மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 939 ரூபாயாக விற்கப்படுகிறது.  கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

photo Credits : IOCl.com