வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (01/11/2018)

காற்று மாசுபாட்டைக் குறைக்க 70 குழுக்கள்... தப்பிக்குமா தலைநகரம்?

கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குப்பைகளை எரிப்பது தடைசெய்யப் பட்டுள்ளது. அதுபோ, லாரிகளும் மாசு ஏற்படுத்தும் வாகனங்களும் அங்கு ஓட்டக் கூடாது. அத்தகைய வாகனங்களுக்கு டெல்லிக்குள் அனுமதியும் கிடையாது.

தலைநகர் டெல்லியிலும் அதைச் சுற்றியும், காற்று மாசு மிக மோசமாக அதிகரித்துள்ளது. 30-ம் தேதி காற்றின் தரத்தைப் பரிசோதித்தபோது, மக்கள் சுவாசிக்கவே தகுதியற்றது என்று கூறுமளவுக்கு மாசு அதிகரித்திருந்தது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குப்பைகளை எரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோக, லாரிகளும் மாசு ஏற்படுத்தும் வாகனங்களும் அங்கு ஓட்டக் கூடாது. அத்தகைய வாகனங்களுக்கு டெல்லிக்குள் அனுமதியும் கிடையாது. மக்கள் வெளியே விளையாடுவது, நடைப்பயிற்சிசெய்வது போன்றவற்றைச் செய்ய வேண்டாமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

காற்று மாசு

Photo Courtesy: AGENCE FRANCE

இன்று காலை 11 மணிக்கு வெளியான காற்று மாசு அளவு அதிர்ச்சியளிக்கிறது. கன மீட்டருக்கு மைக்ரோ கிராம்கள் PM 2.5 அளவு 247 என்றும் PM 10 அளவு 448 என்றும் தற்போது மாசுபாட்டு அளவு உள்ளது. இந்த அளவில் மாசுபாடுடைய காற்றைச் சுவாசிப்பது நச்சுப் புகைக்கு ஈடானது. காற்றின் தரம் PM 2.5 250 முதல் 300 வரையும், PM 10 430 முதல் 500 வரையும் சென்றுவிட்டால், அது சுவாசிக்கவே தகுதியில்லாத காற்று. குருகிராம், ஃபாரிதாபாத், நொய்டா போன்ற பகுதிகளில் இந்த சராசரி விகிதத்தைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு வாழும் மக்களின் சுவாசத்தில் அந்த நுண்துகள்கள் உள்நுழைந்து மிக மோசமான நுரையீரல், இருதய, சுவாசக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அதிலும், PM 2.5 அளவுள்ள நுண்துகள்கள் அதைவிட மோசமாக ரத்த நாளங்களிலும் கலந்து விபரீத விளைவுகளை உண்டாக்கும்.

காற்று மாசு அளவைக் கண்காணிக்க 44 குழுக்கள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தோடு இணைந்து இதைச் செய்யும். அடுத்த 10 நாள்களுக்குள் இந்த அளவைவிட இன்னும் அதிகமாகலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் மேலும் 70 குழுக்களை அமைத்துள்ளார். அவரும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், அந்தக் குழுவோடு ஆலோசித்து டெல்லியின் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர். தப்பிக்குமா தலைநகரம்?