`முதலீட்டாளர்களுக்கு ரூ.14,000 கோடியைக் கொடுங்கள்!' - சகாராவுக்கு செபி உத்தரவு | SEBI asks to refund money

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:50 (01/11/2018)

`முதலீட்டாளர்களுக்கு ரூ.14,000 கோடியைக் கொடுங்கள்!' - சகாராவுக்கு செபி உத்தரவு

சகாரா இந்தியா கமர்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து நிம்மதியிழந்த கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் முகத்தில் நிம்மதிப் பெருமூச்சை வரவைத்துள்ளது செபி. ரூ.14,000 கோடி அளவுக்கு, சகாரா இந்தியா கமர்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்களை (OFCD) வாங்கிய முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரும்படி அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களுக்கு செபி உத்தரவிட்டுள்ளது. அந்த முதலீட்டுக்கு 15% ஆண்டு வட்டியும் சேர்த்துத் தர வேண்டுமென்று கூறியுள்ளது. 

செபி

கடந்த 1998-2009 நிதியாண்டுகளில் 1,98,39,939 முதலீட்டாளர்களிடமிருந்து ஓ.எஃப்.சி.டி வடிவில் ரூ.14,106 கோடி அளவுக்கு முதலீட்டை சகாரா இந்தியா நிறுவனம் வசூலித்திருந்தது. அந்தத் தொகையைத்தான் தற்போது வட்டியுடன் திருப்பி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. தற்போது, சகாரா இந்தியா கமர்சியல் கார்ப்பரேசன் நிறுவனத்தைப் பங்குச் சந்தையிலிருந்து நான்காண்டுகளுக்கு விலக்கிவைத்து உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுப்ரதா ராய், ஜே.பி.ராய், ஓ.பி.ஸ்ரீவஸ்தவா, ரனோஜ் தாஸ் குப்தா, ஏ.எஸ்.ராவ் மற்றும் அவர்களது சட்டபூர்வமான பிரதிநிதிகளான டி.எஸ்.தாபா, பி.எஸ்.மிஸ்ரா மற்றும் ஒய்.என்.சாக்ஸேனா ஆகியோர், இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, நிறுவனத்தின் அனைத்து சொத்துகளின் விவரம், வங்கிக் கணக்கு விவரங்கள், டீமேட் கணக்குகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட விவரங்களைக் காகிதம் மற்றும் டிஜிட்டல் வடிவில் வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டபோது, செபியின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சகாரா இந்தியா கமர்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி தரக்கூடியது. அதுமட்டுமன்றி, பங்குச்சந்தை மீதும் மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தரக்கூடும்" என்றார்.