வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:18 (01/11/2018)

இனி நாள் முழுவதும் மாசு இல்லாமல் பட்டாசு வெடிக்கலாம் - ஆராய்ச்சியாளர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு

பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்க வருகிறது புதுவித பட்டாசு.

பட்டாசு

நவம்பர் 7-ம் தேதியன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். இதில் தீபாவளிக்கு இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி, பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். 

தீபாவளிக்குப் பட்டாசு விற்றால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம். அதனால் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் பட்டாசு போலவே ஆனால், அதற்கு மாற்றாக இ-பட்டாசைத் தயாரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ராஜஸ்தானின் ஜுன்ஜுனு (Jhunjhunu) என்ற மாவட்டத்தில் உள்ள மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (CEERI) சேர்ந்தவர்கள்தான் இதை உருவாக்கியுள்ளனர். இந்த இ-பட்டாசு சாதாரணமாக நாம் வெடிக்கும் ரசாயனம் கலந்த பட்டாசின் அனைத்து தன்மையையும் பெற்றிருக்கும். ஆனால் இதில் ரசாயனம் இல்லை, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது என்கிறார் CEERI-ன் இயக்குநர் சாந்தனு சௌத்ரி. 

இது பற்றி அவர் மேலும் விளக்கும்போது, “இ-பட்டாசில் சாதாரண பட்டாசில் வரும் அதே வண்ண ஒளி மற்றும் ஒலிகள் வரும். ஆனால், இது மாசுபாட்டை ஏற்படுத்தாது. இந்தப் பட்டாசை ரீசார்ஜ் செய்து வெடிக்கலாம் இது பேட்டரியின் உதவியில் இயங்கக்கூடியது. இதன் அருகில் சிறு நெருப்பு பொரி கொண்டு சென்றால் உடனடியாக வெடிக்கத் தொடங்கிவிடும். இ-பட்டாசின் மூலம் பல வண்ண ஒளிகளையும் பல விதமான சத்தங்களையும் உருவாக்க முடியும். இது மிகவும் பாதுகாப்பானது. இந்தப் பட்டாசை முதலில் ஒரு சில பயனர்களுக்கு அளித்து அவர்களின் கருத்து கேட்ட பின்னரே சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும். இ-பட்டாசை சோதனை செய்ய உள்ளூர் மக்களை வரும் 4-ம் தேதி எங்கள் தொழிற்சாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளோம். அங்கே இந்தப் பட்டாசு தொடர்பாகச் செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளார்.