வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:07 (01/11/2018)

`தீப்பெட்டி தொழில்... பிளாஸ்டிக் கம்பெனி வேலை...’ - மகளை ஐஏஎஸ் ஆக மாற்றிய ஏழைத் தந்தைக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள வடயம்பாடி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிகா சுரேந்திரன். இந்த வருடம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் கேரள அளவில் முதலிடம், இந்திய அளவில் 16-வது ரேங்க் என சிவில் சர்வீஸ் தேர்வில் அசத்தினார், 24 வயதாகும் இந்த மங்கை.

ஷிகா - தந்தை சுரேந்திரன்

news source: Mathrubhumi English

முதல் தடவை தேர்வில் தோற்றாலும், விடா முயற்சியால் இரண்டாவது முறை தேர்வில் வெற்றிகண்டார். வெற்றிக்குப் பின் தற்போது நாக்பூரில் ஐஏஎஸ் பயிற்சி எடுத்துவருகிறார். மிகவும் சாதாரண குடும்பத்தில்,  ஒரு கிராமத்தில் இருந்து வந்து மிகப்பெரிய இடத்தை எட்டியுள்ளார். `வெற்றிக்குக் காரணம், என்னுடைய விடா முயற்சியைவிட என் அப்பாவின் கனவும், அவரது உழைப்பும்தான். அதுதான் என்னை முன்னோக்கிச் செல்லவைத்தது' இது ஒரு பேட்டியில் ஷிகா சொல்லிய வார்த்தைகள்.

கே.கே.சுரேந்திரன் தான் இவரது தந்தை. அவர்தான் தனது மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என கனவுடன் வளர்த்தார். ஆனால், அவரது கனவு நனவாவதற்கு முன்னாள் சுரேந்திரன் தற்போது உயிரிழந்துவிட்டார். ஆம், நீண்ட நாள்களாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துவந்தார். சிகிச்சை பலனளிக்காததன் காரணமாக, நேற்று மதியம் அவர் உயிரிழந்தார். இவரது மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷிகா - சுரேந்திரன்

``நாங்கள் வறுமையால் வாடியபோதும், டியூஷன் சென்டர், தீப்பெட்டி தொழில், பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை எனப் பல்வேறு வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்திவந்தார் சுரேந்திரன். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் ஷிகாவின் கல்வி விஷயத்தில் எந்த சமரசமும் செய்ததில்லை. தனது கனவு நனவான சந்தோஷத்தில், ஷிகா ட்ரெயினிங் முடித்து ஐஏஎஸ் ஆகி வரும்போது, சிறப்பாக வரவேற்க வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால், விதி அவரது உடல்நிலையில் விளையாடிவிட்டது" என உருக்கமாகக் கூறியுள்ளார் சுரேந்திரனின் மனைவி ஷிலோ.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க