வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (01/11/2018)

காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் 40 லட்சம் வாகனங்கள் பதிவுநீக்கம்!

புகை மாசுக்குக் காரணமாக இருக்கும் தனியார் வாகனங்களுக்கு நவம்பர் 1 முதல் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் என கணக்கெடுக்கப்பட்டு, மொத்தம் 40 லட்சம் வாகனங்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 40 லட்சம் வாகனங்கள் பதிவுநீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட  1.10 கோடி வாகனங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாகனங்கள் பதிவுநீக்கம் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கான காரணங்களில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை முக்கிய பங்கு வகிப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி

ஏற்கெனவே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கட்டுமான வேலைகளுக்குத் தடை, டீசல் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களுக்குத் தடை, செங்கற்சூளைகளுக்கும் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி காற்று மாசுபாடு தொடர்ந்தால், புகை மாசுக்குக் காரணமாக இருக்கும் தனியார் வாகனங்களுக்கு நவம்பர் 1 முதல் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதையடுத்து, 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் என கணக்கெடுக்கப்பட்டு, மொத்தம் 40 லட்சம் வாகனங்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உலகின் அதிக காற்று மாசுபாடுள்ள 12 நகரங்களின் பட்டியலில் 11 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. நம் தலைநகர் டெல்லி உட்பட 11 நகரங்களும் வட இந்தியப் பகுதியைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்திலுள்ள மிகப்பெரிய தொழில் நகரமான கான்பூர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.