வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (02/11/2018)

கடைசி தொடர்பு:13:25 (02/11/2018)

50 பொருள்களுக்கு வரிவிதிப்பு! - இந்தியாவுக்கு `செக்' வைத்த ட்ரம்ப்

கச்சா எண்ணெய் இறக்குமதியில், இரானுடனான அமெரிக்காவின் வர்த்தகப்போருக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவருகிறது. இதன்காரணமாக அமெரிக்காவின் கோபப்பார்வை இந்தியா மீது திரும்பியிருக்கிறது. அதன் பிரதிபலிப்பாக, இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் 90 பொருள்களில், 50 பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த 50 பொருள்களில் பெரும்பாலானவை கைவினைப்பொருள்கள் மற்றும் விவசாயத்துறை உற்பத்திப் பொருள்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ட்ரம்ப்

இது தொடர்பான அறிக்கையை அமெரிக்க பெடரல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவுப்படி, நவம்பர் 1 முதல், பொதுவான முன்னுரிமை நடைமுறை (GSP-Generalized System of Preferences) ஜி.எஸ்.பி திட்டத்தின் கீழ் வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருக்கும் 50 பொருள்கள் அப்பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் பொருள்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். எந்த நாட்டையும் தனிப்பட்டு குற்றம்சாட்டவில்லை என்றாலும், இந்த ஜி.எஸ்.பி. சலுகை நீக்கப்படுவதால் பெருமளவு பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும். 

இனி இந்தப் பொருள்களை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கமாட்டார்கள். எனினும் இந்தப் பொருள்களை அமெரிக்காவின் பொதுவான வரிவிகிதங்கள்படி இறக்குமதி செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஜி.எஸ்.பி விதிமுறை, அமெரிக்க வர்த்தகத்தில் மிகப் பழைமையான, பெரியதொரு வர்த்தக நடைமுறையாகும். அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த ஜி.எஸ்.பி. விதிமுறைப்படி, 2017-ம் ஆண்டில் இந்தியா வரியில்லாமல் ஏற்றுமதி  செய்துள்ள வர்த்தகத்தின் மதிப்பு 560 கோடி டாலராகும். வரியில்லாத ஏற்றுமதியின் காரணமாக இந்தியாவிலுள்ள சிறு, குறு தொழில்முனைவோர்களும், கைவினைப்பொருள்கள் செய்வோரும்தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.