வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (02/11/2018)

கடைசி தொடர்பு:14:42 (02/11/2018)

`பத்திரிகையாளர் உடலில் துளைத்த குண்டுகளுக்கு என்ன பதில்?’ - மாவோயிஸ்ட்களை சாடும் போலீஸ்

 

பத்திரிகையாளர்


சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்த செய்திகளைச் சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர்கள் குழு தந்தேவாடா மாவட்டத்தில் தங்கியிருந்தனர். நில்வாயா பகுதியில் கடந்த 20 வருடங்களாக மக்கள் ஓட்டுப்போடவில்லை. எனவே, அங்கு ஒரு செய்தியாளர், கேமராமேன், லைட்டிங் உதவியாளர்கள் விரைந்துள்ளனர். அவர்களுடன் காவல்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். அப்போது திடீரென நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த சாஹூ மற்றும் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர். 

மாவோயிஸ்டுகள் தரப்பில், ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவோயிஸ்டுகளின் இந்த விளக்கத்தை காவல்துறையினர் மறுத்துள்ளனர். திட்டமிட்டே தாக்குதல் நடைபெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். இதுதொடர்பாக தந்தேவாடா காவல்கண்காணிப்பாளர் அபிஷேக் கூறுகையில், `` மாவோயிஸ்ட்கள் கூறுவதை ஏற்க முடியாது. எதற்காக கேமராக்களை சூறையாடினர். தாக்குதல் சம்பவம் அரங்கேறிய முதல் சில விநாடிகள் கேமராவில் பதிவாகியிருந்தது. அதில் ஒளிப்பதிவாளர் கொடூரமாகத் தாக்கப்படுவது பதிவாகி இருந்தது. உயிரிழந்த அச்சுதானந்த சாஹூவின் மண்டை ஓட்டில் கடுமையான காயங்கள் இருந்தன. மேலும், அவரது உடலில் ஏராளமான துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து இருந்தது. இவையெல்லாம் தெரியாமல் நடந்ததா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிர்தப்பிய தூர்தர்ஷன் செய்தியாளர் தீரஜ் குமார் அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் மரத்தில் இருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை நீக்கினர். அதை சாஹூ கேமராவில் ஷூட் செய்துகொண்டிருந்தார். திடீரென சாஹூ தரையில் விழுந்தார்.  அவரது உடலிலிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டேன். சாலையின் இடது பக்கத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன எனத் தெரிவித்திருந்தார்.