`ஐயப்ப பக்தர் மரணத்துக்கு யார் காரணம்?’ - கேரளாவில் தொடங்கிய அடுத்தகட்ட போராட்டம் | sabarimala devotee death bjp shut down at pathanamthitta

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (02/11/2018)

கடைசி தொடர்பு:15:45 (02/11/2018)

`ஐயப்ப பக்தர் மரணத்துக்கு யார் காரணம்?’ - கேரளாவில் தொடங்கிய அடுத்தகட்ட போராட்டம்

சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்புக்குக் காவல்துறையினரே காரணம் என கேரள பா.ஜ.க-வினர் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

சபரிமலை பக்தர்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் நடை திறக்கப்பட்டிருந்த ஐந்து நாள்களும் நிலக்கல், பம்பை மற்றும் கேரளாவின் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அந்த ஐந்து நாள்களும் சபரிமலை சந்நிதானம் உச்சகட்ட பரபரப்புடனேயே காணப்பட்டது. இதையடுத்து பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்களைத் தேடப்படும் நபராகக் கேரள காவல்துறை அறிவித்ததால் அதுவும் ஒருபுறம் புயலை கிளப்பியது. 

இதனிடையே கோயில் நடை திறந்தபோது பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் அக்டோபர் 18-ம் தேதி காலை சபரிமலைக்குச் சென்றுள்ளார். அவர் சென்று சில தினங்கள் ஆகியும் வீடு திரும்பாததால் சிவதாசன் காணாமல் போனதாக அக்டோபர் 21-ம் தேதி பம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அவரின் உறவினர்கள். மேலும், அக்டோபர் 24-ம் தேதி பந்தளம் காவல் நிலையத்திலும் புகார் வழங்கப்பட்டது. காவல்துறையினர், சிவதாசனின் உறவினர்கள் எனப் பலரும் நீண்ட நாள்களாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் சபரிமலைக்கு அருகில் உள்ள லஹா என்ற வனப்பகுதியில் அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 

நடை திறக்கப்பட்டபோது சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்ல முயன்றதை எதிர்த்து நிலக்கல், பம்பை, கோயில் சந்நிதானம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் சிவதாசனும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் போராட்டத்தில் காவலர்கள்தான் சிவதாசனை அடித்துக்கொன்றுவிட்டனர் என அவரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதே புகாரைக் கூறி கேரள பா.ஜ.க-வினரும் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள அம்மாவட்ட தலைமை காவல் அதிகாரி நாராயணன், “சிவதாசன் இறந்தது ஒரு விபத்து. ஆனால், அதைப் பா.ஜ.க-வினர் பெரிது படுத்துகின்றனர். அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் மட்டுமே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. ஆனால், சிவதாசன் 18-ம் தேதி தன் வீட்டைவிட்டுக் கிளம்பியுள்ளார். 19-ம் தேதி சந்நிதானத்துக்குச் சென்றுள்ளார். மேலும் தடியடி நடந்தது நிலக்கல்லில் மாறாக சிவதாசன் உடல் லஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதற்குக் காவல்துறையினர் மீது புகார் கூறுவது தவறானது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிவதாசன் மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் பதனம்திட்டா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.