வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (02/11/2018)

`உங்களுக்காக ஒருவன் இருக்கிறான்’ - உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குக் கடிதம் எழுதும் பாதுகாவலர்

போர்க்களத்தில் உயிர் நீக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, 18 ஆண்டுகளாகக் கடிதம் எழுதிவருகிறார், குஜராத் பாதுகாவலர் ஒருவர்.

பாதுகாவலர்

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள குத்தேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிடேந்திர சிங். இவர், தற்போது குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலைபார்த்துவருகிறார். ராணுவத்தில் பணியாற்றி, பணியில் இருக்கும்போதே நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு, கடந்த 18 வருடங்களாகக் கடிதம் எழுதிவருகிறார் ஜிடேந்திர சிங். இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, “ இரண்டாம் உலகப் போரின்போது என் குடும்பத்தினரும் ராணுவத்தில் இருந்து உயிர்நீத்துள்ளனர். எனக்கும் ராணுவத்தில் சேர்வது கனவாக இருந்தது. ஆனால், என்னால் தேர்வில் வெற்றிபெறமுடியாமல் தோற்றுவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, ராணுவம்தான் மிகவும் கடினமான வேலை. அவர்கள், தங்களின் சொந்தங்களை, காதலை விட்டுவிட்டு நாட்டுக்காகச் சென்று உயிர்த்தியாகம் செய்கிறார்கள். அதேபோல, தனக்கு மிகவும் பிடித்த ஒருவரை நாட்டுக்காக இழந்துவிட்டு, அவரது குடும்பத்தினர் தினம் தினம் இருளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சிறு ஆறுதல் அளிக்க விரும்பியே நான் கடந்த 18 வருடங்களாக இதைச் செய்துவருகிறேன். 

1999-ம் வருடம் நடந்த கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு, முதன்முதலாகக் கடிதம் எழுதத் தொடங்கி, தற்போது வரை தொடர்ந்து எழுதிவருகிறேன். நான், முதலில் ராணுவத் தலைமை அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு, வீரர்களின் முகவரிகளைக் கேட்டேன். ஆனால், அவர்கள் அதைத் தர மறுத்துவிட்டனர். பிறகு, செய்தித்தாள்கள் ஊடகங்கள் என எனக்குக் கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு கடிதம் எழுதத் தொடங்கினேன். ‘உங்களுக்காக குஜராத்தில் ஒருவன் இருக்கிறான் கவலைப்படாதீர்கள்’ என்று மட்டுமே நான் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்குச் சொல்ல விரும்பினேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் குடும்பத்தை நான் பார்த்துள்ளேன். அவர்களின் வலி என்னவென்று எனக்குத் தெரியும். நாம் அனைவரும் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். என் எழுத்துக்களின்மூலம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ஜிடேந்திர சிங், தான் வாங்கும் 10,400 ரூபாய் சம்பளத்தில், தன் வீட்டில் கடிதம் எழுதுவதற்காகவும் தனக்கு வரும் பதில் கடிதத்தைச் சேகரிக்கவும் ஒரு தனி அறையை ஒதுக்கியுள்ளார்.