`59 நிமிடத்தில் தொழிற்கடன்!’ - புதிய இணையதளத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி | loan in 59 minutes for msme pm modi launches new portal

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (02/11/2018)

`59 நிமிடத்தில் தொழிற்கடன்!’ - புதிய இணையதளத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி

ஜி.எஸ்.டி பதிவுபெற்ற எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள், தொழிற்கடனை நல்லவிதமாகத் திருப்பிச் செலுத்தியதோடு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும்போது, அதற்கான வட்டியில் 2% வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

நம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ), விண்ணப்பித்து 59 நிமிடத்தில் தொழிற்கடன் வழங்குவதற்கு புதிய இணையதளத்தை பிரதமர் மோடி இன்று மாலையில் தொடங்கிவைத்தார். இதன்படி, ஜி.எஸ்.டி பதிவுசெய்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை எளிதில் தொழிற்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு மேலும் பல திட்டங்களைக் கூடுதலாக இன்று அறிவித்துள்ளார்.

மோடி

ஜி.எஸ்.டி பதிவுபெற்ற எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள், தொழிற்கடனை நல்லவிதமாகத் திருப்பிச் செலுத்தியதோடு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும்போது, அதற்கான வட்டியில் 2% வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஏற்றுமதித்துறையில் ஈடுபடும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு முந்திய மற்றும் பிந்திய கடன்களுக்கான வட்டிக்கு வழங்கப்படும் மானியம் 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இவ்வாறு எம்.எஸ்.எம்.இ. தொழில்முனைவோர்களின் வளர்ச்சிக்காக 12 வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றை தீபாவளிப்பரிசு என்றும் குறிப்பிட்டார்.

உலக வங்கி அறிவித்துள்ள 'தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின்' பட்டியலில் இந்தியா, 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 142 வது இடத்திலிருந்து தற்போது 77வது இடத்துக்கு முன்னேறியிருப்பது மற்ற யாரும் நம்பமுடியாத, செய்ய இயலாத சாதனையாகும் என்றும் பெருமையுடன் கூறியுள்ளார். இந்த இடத்திலிருந்து 50 வது இடத்தைப் பிடிப்பது ஒன்றும் கடினமான ஒன்றல்ல என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.