வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:24 (03/11/2018)

`ரூ.15 லட்சம் வந்திருச்சா?' - வங்கிகளில் நூதன போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ்

நரேந்திர மோடி
 

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளிலுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும்' எனக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தெரிவித்திருந்தார், பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியமைத்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் மோடி அரசை விமர்சனம் செய்துவருகின்றனர். 

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி நேற்று மும்பையிலுள்ள பல்வேறு வங்கிகளுக்குச் சென்ற அக்கட்சித் தொண்டர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதனை செய்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணம் செலுத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்து, பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முழக்கமிட்டு அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.