வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:35 (03/11/2018)

``திட்டமிட்டுத் தாக்கவில்லை” - செய்தியாளர் கொல்லப்பட்டதுக்கு வருத்தம் தெரிவித்த மாவோயிஸ்டுகள்

தூர்தர்ஷன்  செய்தியாளர் அச்சுதானந்த் சாஹூவை கொலை செய்தது உள்நோக்கம் கொண்ட நிகழ்வல்ல என மாவோயிஸ்டுகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசு சார்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளைப் பதிவு செய்ய தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழுவினர் சென்றிருந்தனர்.  மாவோயிஸ்டுகள் மறைந்திருந்த பகுதிக்குச் சென்ற அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த  சம்பவத்தில் தூர்தர்ஷனில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த அச்சுதானந்த் சாஹூ என்பவர் உயிரிழந்தார்.

அச்சுதானந்த் சாஹீ நக்ஸலைட் தாக்குதலில் இறந்தவர்

இந்த சம்பவம் முடிந்து மூன்று நாள்கள் ஆன நிலையில் செய்தியாளரின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மாவோயிஸ்டுகள். அந்தக் கடிதத்தில் ``இந்தச் சம்பவம் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டதில்லை, நாங்கள் மறைவிடங்களில் பதுங்கி தாக்குதல்களை நடத்தி வந்தோம். அப்போது அவர் போலீஸாரோடு  பைக்கில் வந்தது தான் இந்த பிரச்னைகளுக்கு காரணம். நாங்கள் அவரைக் குறிவைத்து தாக்கவில்லை. செய்தியாளர்கள் எங்கள் எதிரிகள் அல்ல, எப்போதும் எங்கள் நண்பர்களே. எங்கள் பகுதிகளுக்கு வரும்போது பாதுகாப்பு படையினரோடு வரவேண்டாம், அச்சுதானந்த் சஹூ இறப்பு வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.