வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (03/11/2018)

கடைசி தொடர்பு:08:52 (03/11/2018)

திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரும் முன்னாள் முதல்வர் மகன்!

லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

விவாகரத்து

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கு கடந்த மே மாதம் 12-ம் தேதி பாட்னாவில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவைதான் இவருக்கு மணமுடித்து வைத்தனர். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை பெற்று வந்த நிலையில் அவர் இல்லாமலே இத்திருமணம் நடந்தது. ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் வருகை புரிந்திருந்தனர். வாழ்த்து போஸ்டரிலே சர்ச்சை கிளம்பியது. திருமணத்துக்காக லாலு வீடு அமைந்திருந்த பகுதியில் வாழ்த்து போஸ்டர் வைக்கப்பட்டது. அதில் மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும் மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி இருந்தனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், பாட்னாவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து அளிக்கக்கோரி பிரதாப் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில் ``இருவருக்கும் இணக்கமாகச் செல்வதில் பிரச்னை உள்ளது. ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ விரும்பவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான 6 மாதத்தில் விவகாரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.