வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (03/11/2018)

கடைசி தொடர்பு:10:50 (03/11/2018)

சபரிமலையில் பெண்களைத் தடுத்ததாக 3701 பேர் கைது!

சபரிமலையில் பெண்களை தடுத்ததாகத் தொடரப்பட்ட 543 வழக்குகளில் இதுவரை 3701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை செல்ல முயன்ற இளம் பெண்களை பக்தர்கள் போர்வையில் இருந்தவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து கைது செய்துவருகின்றனர். சபரிமலையில் பக்தர்களை தடுத்து பிரச்னை செய்ததாக 210 பேரின் புகைப்படங்களை காவல்துறை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. இதுவரை 543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 3701 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்துள்ளார். சித்திரை ஸ்ரீ ஆட்ட திருநாளுக்காக வரும் 5-ம் தேதி மாலை முதல் 6-ம் தேதி இரவு வரை சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதை ஒட்டி இன்று இரவு முதல் வரும் 6-ம் தேதி இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலைக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.