வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (03/11/2018)

கடைசி தொடர்பு:12:20 (03/11/2018)

குட்டிகள் நிலை தெரியவில்லை; 'உயிர்க்கொல்லி ' அவ்னி புலி சுட்டுக்கொலை!

யிர்க்கொல்லியாக மாறிய அவ்னி புலி பந்தர்கவாடா காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டது. 

அவ்னி புலி

மகாராஷ்ட்ரா மாநிலம் யாவத்மாலா மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியையொட்டி சில கிராமங்கள் உள்ளன. காட்டுக்குள் வரும் மனிதர்களை 6 வயது பெண் புலி ஒன்று தொடர்ந்து தாக்கி வந்தது. இந்தப் புலிக்கு இரண்டு குட்டிகளும் இருந்தன. வனத்துறையினர் இந்தப் புலிக்கு அவ்னி என்று பெயரிட்டிருந்தனர். புலிகள் ஒரு முறை நரமாமிசத்தைப் புசித்து பழகி விட்டால் அவை உயிர்க்கொல்லிகளாக மாறித் தொடர்ந்து மனிதர்களைக் குறி வைத்து வேட்டையாடப் பழகிவிடும். புலியின் உணவுப்பட்டியலில் மனிதர்கள் இல்லையென்றாலும், எதிர்பாராதவிதமாகப் புலிகள் மனிதர்களைத் தாக்கி ருசி காண்பதே இதற்குக் காரணம். இன்னொரு விஷயம் மனிதர்களைப் புலிகள் எளிதாக வேட்டையாட முடியும்.  

கடந்த  2016- ம் ஆண்டு போர்தி கிராமத்தைச் சேர்ந்த ஷோனாபாய் போஸ்லே என்பவர்தான் அவ்னியின் முதல் இரை. தொடர்ச்சியாக 2018- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 13 உயிர்ப் பலிகள். இன்னொரு தகவல் என்னவென்றால், அவ்னியின் இரு குட்டிகளும் வேறு நரமாமிசத்தைச் சாப்பிட்டு பழகியிருந்ததோடு, தாய் மனிதர்களை வேட்டையாடுவதை அவை பார்த்திருந்தன. பின்னாளில் மிகக் கொடிய உயிர்க்கொல்லிகளாக இந்தக் குட்டிகள் மாறும் அபாயம் வேறு இருந்தது. மனிதர்கள் கொல்லப்பட்டதையடுத்து மக்கள்  பெரும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், அவ்னியை சுட்டுக் கொல்ல பம்பாய் உயர்நீதிமன்றத்திடம் வனத்துறையினர் அனுமதி வாங்கினர்.  விலங்கு நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டனர். உச்சநீதிமன்றம் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அவ்னியின்  குட்டிகளைக் கொல்லக்கூடாது. உயிரோடு பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அவ்னி சுட்டுக் கொல்லப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது. அவ்னி புலியின் 10 மாதக் குட்டிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. . ஹைதராபாத்தைச் சேர்ந்த  அக்ஷார் புலியை சுட்டுக் கொன்றார்.

கொல்லப்பட்ட 13 பேர்களில் 5 பேரின் உடலில் அவ்னியின் டி.என்.ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவரது உடலில் அதே பகுதியில் வசித்த மற்றொரு ஆண் புலியின் டி.என்.ஏ  இருந்தது. அதேவேளையில் அக்ஷார் அவ்னியை சுட்டுக் கொன்றபோது வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் யாரும் உடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வனத்துறை அவ்னியை உயிரோடு பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க