வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:20:30 (04/11/2018)

இந்தியாவில் ஒரு ஈஃபில் டவர் - பிரம்மிப்பூட்டும் டெல்லி சிக்னேச்சர் பாலம்!

`டெல்லி சிக்னேச்சர் பாலம்’ இந்தியாவின் முக்கிய அடையாளங்களுக்குள் ஒன்றாக மாற உள்ளது. பிரம்பிப்பூட்டும் இந்த பாலம் டெல்லிவாசிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சிக்னேச்சர் பாலம்

`டெல்லி சிக்னேச்சர் பாலம்’ 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த பாலத்துக்கு 2007-ம் ஆண்டுதான் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  வடகிழக்கு டெல்லியையும், காஜியாபாத் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில் யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத்தில் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, 2013-ல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின், 2017 ஜூலை முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்படியாக நீண்டுகொண்டே சென்றதையடுத்து இன்று பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்க டெல்லி அரசு சார்பில் 1,344 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 154 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் காண்பவர்களை கவரும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாலம்

கிழக்குப்பகுதியில் 1.8 கிலோமீட்டர் தூரமும், மேற்குபகுதியில் 1.5 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கிய இந்த பாலத்தில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் பயண நேரம் பெருமளவில் குறைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இப்படியாக அமைக்கப்பட்டுள்ள சிக்னேச்சர் பாலத்தின் மேற்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 பேர் செல்லும் வகையிலான 4 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரிஸில் உள்ள ஈஃபிள் டவரில் பார்க்கும்போது கிடைக்கும் பானரோமா காட்சியின் அனுபவத்தை இந்த பாலம் தரும் என பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்த மேலும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  இரு கைகளை கூப்பி வணக்கும் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், இந்தியாவின் சமச்சீரற்ற முதல் பாலமாகும். 250மி.மீ தடிமனான எஃகு தகடு மூலம் கட்டப்பட்டுள்ளது. டெல்லியின் ரிங் ரோடு பகுதியிலிருந்து வாஜியாபாத்தை 8 வழிச்சாலை மூலம் இந்த பாலம் இணைப்பதால் பயண நேரம் ஏறக்குறைய 30 நிமிடத்துக்கு மேலாகக் குறையும். வெளிநாட்டுப்பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.