`உங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?' - வலுக்கும் மோதல்; உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்! | RBI Governor Urjit Patel gets show-cause notice over non-disclosure of wilful defaulters’ list

வெளியிடப்பட்ட நேரம்: 06:08 (05/11/2018)

கடைசி தொடர்பு:08:55 (05/11/2018)

`உங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?' - வலுக்கும் மோதல்; உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீப காலமாக வங்கியில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகிவருவது அதிகரித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது உறவினர்கள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவர்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு சொன்னாலும், மத்திய அரசின் துணையால்தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இப்படியான சூழ்நிலையில், `நான் ரிசர்வ்  வங்கியின் கவர்னராக இருந்தபோது பண மோசடி செய்பவர்களைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, பண மோசடிகளில் ஈடுபட்ட அதிமுக்கியப் புள்ளிகளின் பெயர் விவரப் பட்டியலைத் தயாரித்து, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன். ஆனால், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விவரங்கள் எனக்குத் தெரியவில்லை' எனக் கூறி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இது ஒருபுறம் இருக்க, வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், இந்தப் பெயர்களை அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் பட்டியலை ரிசர்வ் வங்கி அனுப்பவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ``தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதாகத் தனது இணையதளத்தில் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி. 

அதேபோல, ரிசர்வ் வங்கி கவர்னரும் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றிவருவதாகக் குறிப்பிட்டுவருகிறார். ஆனால், அப்படி ஏதும் நடைபெறவில்லை. இதற்கு எதிர்மறையாகவே நடந்துகொள்கிறீர்கள். வங்கிக் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் அவமதித்துள்ளீர்கள். உத்தரவை மதிக்காமல், தகவல் ஆணையத்துக்குத் தகவல் அளிக்காததற்கு நீங்களே பொறுப்பு என்று தகவல் ஆணையம் கருதுகிறது. உங்களுக்கு ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக் கூடாது. இது தொடர்பாக 16-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீப காலமாக ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான போக்கு இல்லை. பனிப்போர் நிலவி வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க