வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (05/11/2018)

கடைசி தொடர்பு:09:15 (05/11/2018)

‘திருப்பதியில் மாயமான 26 ஆயிரம் லட்டுகள்... ஊழியர்கள் கைவரிசை’ - அதிர்ச்சியில் தேவஸ்தானம்

திருப்பதி திருமலையில், 26ஆயிரம் லட்டுகளை முறைகேடாக விற்பனைசெய்தது தொடர்பாக, 30 ஊழியர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி

திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயிலில், இரண்டாவது பிரம்மோற்சவம் கடந்த அக்டோபர் 9 -ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா முடிந்த பின்பு, கோயில் நிர்வாகம் கணக்கு பார்த்தபோது 14லட்சம் ரூபாய் மதிப்பிலான லட்டுகள் காணாமல்போனது தெரியவந்தது. திருமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு மானிய விலையில் 2 லட்டுகள் 20 ரூபாய்க்கு வழங்குகின்றனர். மேற்கொண்டு கூடுதலாக 2 லட்டுகள் 50  ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். லட்டு விற்பனை மூலமாகவே கோயில் நிர்வாகத்துக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே லட்டு வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருமலையில் கூட்டம் அலைமோதியது. கணினி கோளாறு காரணமாக டோக்கன்களை ஸ்கேன் செய்யாமல் லட்டு விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் அனுமதியளித்தது. விழா முடிந்த பின்பு கணக்கு பார்த்தபோது, சுமார் 26 ஆயிரம் லட்டுகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுதொடர்பாக திருமலை தேவஸ்தானம் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், திருமலை தேவஸ்தான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக லட்டு வழங்கும் 30 கவுன்டர்களில் பணியுரியும் 100 ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த முறைகேட்டில் 18 பேர் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், லட்டு டோக்கன்களைச் சுழற்சி முறையில் கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்துள்ளது.