வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (05/11/2018)

கடைசி தொடர்பு:13:10 (05/11/2018)

விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி... பகவத் கீதையுடன் நாடு திரும்பினார்!

ந்திய விமானப்படை ஆவணங்களுடன்  கைது செய்யப்பட்ட ஜலாலுதீன் என்ற பாகிஸ்தான் கைதி 16 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். நாடு திரும்புகையில் பகவத் கீதையை அவர் உடன் எடுத்துச் சென்றார். 

விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி

வாரணாசி கன்டோன்மென்ட் பகுதியில் இந்திய விமானப்படை தொடர்புடைய ஆவணங்களுடன் கடந்த 2001- ம் ஆண்டு ஜலாலுதீன் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் அவரிடத்திலிருந்து கன்டோன்மென்ட் பகுதி மேப் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. உளவுப் பார்த்ததாகவும் இந்திய நாட்டின் ரகசியங்களை அறிந்துகொள்ள முயன்றதாகவும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்.

கைது செய்யப்பட்ட போது ஜலாலுதீன் 10-ம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். வாரணாசி சிறையில் இருந்தபோது இந்திராகாந்தி தொலை தொடர்பு பல்கலை வழியாக எம்.ஏ படித்தார். கைத் தொழில் தேவை என்ற வகையில் எலக்ட்ரீசியன் தொழிலையும் கற்றுத் தேர்ந்தார். கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட ஜலாலுதீன் சிறைக் கைதிகள் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரையும் திறம்பட நடத்திக் காட்டினார். 

இந்நிலையில், நேற்று விடுவிக்கப்பட்ட ஜலாலுதீன் அம்ரிஸ்தர் வாகா எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தாய்நாட்டுக்குத் திரும்புகையில் உடன் பகவத் கீதையையும் ஜலாலுதீன் எடுத்துச் சென்றது போலீஸ் அதிகாரிகளுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் அளித்தது. ஜலாலுதீனுக்கு நல் வாழ்க்கை அமைந்திட இந்திய அதிகாரிகள் வாழ்த்துக் கூறி மகிழ்வுடன் அனுப்பி வைத்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க