வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (05/11/2018)

கடைசி தொடர்பு:14:10 (05/11/2018)

அவ்னியைத் தொடர்ந்து மற்றொரு பெண் புலி டிராக்டர் ஏற்றிப் படுகொலை!

வ்னி புலியைத் தொடர்ந்து, மற்றொரு பெண் புலி டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. 

அவ்னியை தொடர்ந்து மற்றொரு புலி கொலை

மகாராஷ்ட்ர மாநிலத்தில் 13 பேரைக் கொன்ற அவ்னி புலி கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் இருந்து 210 கி.மீ தொலைவில் துத்வா வனச் சரணாலயம் உள்ளது. வனத்துக்குள் வந்த இளைஞர் ஒருவரைப் பெண் புலி தாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.  கூட்டமாக வனத்துக்குள் சென்று, அந்தப் புலியைக் கண்டுபிடித்து அதைக் கம்பால் தாக்கினர். பின்னர், டிராக்டர் கொண்டு ஏற்றிக்  கொலைசெய்தனர். வனத்துறையினரால் கிராம மக்களின் செயலைத் தடுக்க முடியவில்லை. 

கொல்லப்பட்ட புலிக்கு 10 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வனத்துறையினர், கடந்த 10 ஆண்டுகளில் புலி மனிதர்களைத் தாக்கிய சம்பவம் நடந்ததில்லை என்கின்றனர். ஆனால் கிராமத்தினரோ, கொல்லப்பட்ட புலி கடந்த இரு வாரங்களாகக் கிராமத்துக்குள் புகுந்து தங்கள் ஆடு, மாடுகளைக் கடித்துக் கொன்றதாகவும், வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். புலியைக் கொன்றவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் புலிகள் இனம் உள்ளது. அவ்னி புலி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது, இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளன. ஒரே வாரத்தில் இரண்டு புலிகளை இழந்துள்ளோம். விலங்குகள் மனித மோதல்களைத் தடுக்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று, நடிகர் ரந்தீக் ஹூடா ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க