வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (06/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (06/11/2018)

`யமுனை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!’ - நச்சுக்கழிவுகள் காரணமா?

யமுனை

கடந்த வாரத்திலிருந்து யமுனை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்ட பகுதியில் பாயக்கூடிய யமுனை நதியில்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நச்சுக்கழிவுகள் யமுனை நதியில் வெளியேற்றப்படுவதால்தான் மீன்கள் இறந்துள்ளன என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆயிரக்கணக்கான மீன்கள் வியாழக்கிழமையிலிருந்து செத்து மிதக்கின்றன. மலைப்பாதையில் குளியலுக்காகச் சென்றவர்கள்தான் இந்தச் சம்பவத்தைப் பார்த்துள்ளனர். மதுரா மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பவம் நடந்த முதல்நாளே மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வுக்காக நதியின் நீர் மாதிரியை எடுத்துள்ளது. தீபாவளியை அடுத்து நவம்பர் 9-ம் தேதி யமுனை நதியில் பரவலாக பக்தர்கள் கூடுவதால் அதிகாரிகள் இன்னும் பதற்றத்தில் உள்ளனர். அதற்குள்ளாக இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டியுள்ளது.

ஏற்கெனவே கங்கை நதியை அளவுக்கதிகமாக மாசுபடுத்தி அந்த நதி இறந்துவிட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. அதேபோல் யமுனையும் மாறிவிடலாம் எனப் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் தொடர்ச்சியாக நச்சுக்கழிவுகள் யமுனை ஆற்றில் கலந்து வருவதாகவும் அதை அரசு பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவாகவே ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.