வெளியிடப்பட்ட நேரம்: 05:27 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:50 (07/11/2018)

`சபரிமலை விவகாரத்தில் கேரளாவே நமக்கு சரண்டர்' - பகீர் கிளப்பும் ஸ்ரீதரன் பிள்ளை!

சபரிமலை விவகாரம் கேரள பா.ஜ.க-வுக்குப் பொன்னான வாய்ப்பு என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீதரன் பிள்ளை

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் நடை திறக்கப்பட்டிருந்த ஐந்து நாள்களும் நிலக்கல், பம்பை மற்றும் கேரளாவின் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அந்த ஐந்து நாள்களும் சபரிமலை சந்நிதானம் உச்சகட்ட பரபரப்புடனேயே காணப்பட்டது. இதையடுத்து, பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டங்களை எல்லாம் கேரள பா.ஜ.க முன்னின்று நடத்தியது. சமீபத்தில் கேரளா  வந்திருந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, ``சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை பினராயி விஜயன் அமல்படுத்த முயன்றால் கேரள அரசு கவிழ்க்கப்படும்" என்று பேசினார். கடையடைப்பு, மறியல் எனச் சபரிமலை விவகாரத்தில் ஆரம்பம் முதலே கேரள பா.ஜ.க போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

இதற்கிடையே, சபரிமலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் அம்மாநில பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை. கோழிக்கோடு மாவட்டத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ லீக் ஆகியுள்ளது. அதில், ``சபரிமலை விவகாரம் கேரள பா.ஜ.க-வுக்குப் பொன்னான வாய்ப்பு. இந்த விவகாரத்தில் நாம் ஒரு அஜெண்டாவை முன்னெடுத்தோம். அதற்கு அனைவரும் சரண்டர் ஆகிவிட்டனர். அந்த அஜெண்டா தற்போது நம்மால் வெற்றிபெற்றுள்ளது. தற்போது நமது கையில்தான் அனைத்துக் காரியங்களும் உள்ளது. 17-ம் தேதி முதல் 22 வரை நாம் திட்டமிட்டது போலவே நாம் சந்நிதானம் சென்றோம். நாம் நினைத்ததுபோல் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீஜித் இரண்டு பெண்களை அழைத்துச் செல்ல முயன்றபோது மக்களை அழைத்து வந்து தடுத்து நிறுத்தினோம். 

இது நமக்குக் கிடைத்த வெற்றி. மலைக்குப் பெண்கள் வரத்தொடங்கியதும், தலைமை தந்திரி பதற்றம் அடைந்துவிட்டார். அப்போது அவர் என்னைத் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். ``பெண்கள் வருவதைத் தடுப்பதற்காக கோயில் நடையைச் சாத்திவிடலாமா? அப்படிச் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா?'' என என்னிடம் கேட்டார். ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இருக்க முடியாது. அப்படி வழக்கு தொடர்ந்தால் முதலில் எங்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்பார்கள். தைரியமாக மூடலாம். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் எனக் கூறினேன். எனது ஆலோசனையின் படியே அவர் கோயில் நடையை மூடினார்" எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 

ஸ்ரீதரன் பிள்ளை பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ``பா.ஜ.க-வின் அருவருப்பான அரசியல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சபரிமலை விவகாரத்தில் சிக்கலை உருவாக்கப் பா.ஜ.க தலைவர்கள் முயன்றுள்ளனர் என்பதற்கு  சான்றுதான் இது. இந்தச் சூழ்ச்சியில் ஸ்ரீதரன் பிள்ளைக்குத் தொடர்பு இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க