வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (06/11/2018)

கடைசி தொடர்பு:15:45 (06/11/2018)

"பி.ஜே.பி. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன்

பி.ஜே.பி. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் எனவும் அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறி வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த மாதத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மத்திய பி.ஜே.பி. அரசின் மீதான நாட்டு மக்களின் கணிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தாண்டு மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதத்தில் வெவ்வேறு கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கே செல்வாக்கு அதிகம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. என்றாலும், பி ஜே பி அந்த மாநிலங்களில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி. பி ஜே பி-யை வீழ்த்துவதே காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் பொதுவான நோக்கம் என்பதால், கூட்டணி சேர்ந்திருப்பதாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் பேட்டியளித்திருந்தனர்.

பி ஜே பி -க்கு எதிராக கூட்டணி

பி ஜே பி. கூட்டணியில் இருந்து ஏற்கெனவே தெலுங்குதேசம் வெளியேறி விட்டது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் இப்போது கூட்டணியில் இல்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்து விட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி எந்த மாதிரியாக இருக்கும்? பி.ஜே.பி-யுடன் தற்போது நெருக்கமாக உள்ள அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்பது போன்ற கேள்விகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில்தான், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், தெலங்கானா  சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. அந்தக் கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு, ஏற்கெனவே மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். தெலங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர ராவும் மத்திய கூட்டணியில் இருந்தவர்தான். மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் பி ஜே பி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டது. இதுபோன்ற பல கட்சிகள் இப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மத்திய கூட்டணியில் இருந்த கட்சிகள், இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறுகின்றன. இதற்குக் காரணம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தேறப் போவதில்லை என்பதால்தான். அந்தக் கட்சியோடு இருந்தால் நாமும் வெற்றிபெற முடியாது என்பதால், தற்போது கூட்டணிக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, 'ஒரு மூழ்குகிற கப்பல் என்பதால், அதில் நாமும் ஏன் சேர்ந்து பயணிக்க வேண்டும்?' என்று மாநிலக் கட்சிகள் நினைத்திருக்கலாம். 

கே.பாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் மட்டும்தான் கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க., மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. மத்திய பி.ஜே.பி. அரசுக்குத் தமிழக அரசு மறைமுக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சிப் பூசலை மறைப்பதற்காக, பி.ஜே.பி-யை அந்தக் கட்சியின் இரு பிரிவினரும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், வெங்கையா நாயுடு, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது, எடப்பாடியும், டி.டி.வி. தினகரனும் பி.ஜே.பி-யை ஆதரித்தனர். பி.ஜே.பி-யை எதிர்ப்பதாகச் சொல்லிவரும் தினகரனின் ஆதரவு எம்.பி-க்களும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். எனவே, மத்திய அரசை ஆதரிப்பதில் அவர்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, மாநிலத்தில் அதிகாரத்தை யார் கையில் வைத்துக் கொள்வது, பதவி சுகத்தை யார் அனுபவிப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் கொள்ளையடிப்பது என்பதில்தான் அவர்களுக்குள் பிரச்னையே தவிர, மத்திய அரசை ஆதரிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரதமர் மோடியைச் சந்தித்து, ஆதரவு தெரிவிப்பதுடன் ஆளாளுக்கு அவர்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக எந்தவொருக் கட்சியும் சேரவில்லை. சேரத் தயாராகவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் கட்சிகள்தான் ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பி.ஜே.பி-க்கென்று பெரிய அளவில் செல்வாக்கு ஏதுமில்லை. அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசையும் பி.ஜே.பி-க்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அப்படி ஒரு சூழல் இங்கு இல்லை. ஆட்சி அதிகாரம் இல்லையென்றால், அவர்களை யாரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். என்றாலும், தமிழகத்தில் பி.ஜே.பியோ, அந்தக் கட்சியுடன் ஒருவேளை அ.தி.மு.க.வோ, வேறு கட்சிகளோ கூட்டணி சேர்ந்தால், அந்தக் கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு அணி உருவாகும். அதாவது, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து, தமிழகத்தில் ஒரு வலுவான அணி ஏற்படுவது உறுதி" என்றார், கே. பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்