வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (07/11/2018)

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் - பா.ஜ.க தோல்வி!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதியில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக பா.ஜ.க-வின் கோட்டை என்று அழைக்கப்படும் பெல்லாரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

காங்கிரஸ்

கர்நாடகாவில்  லோக்சபா தொகுதிகளான சிவமுகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய தொகுதிகளுக்கும், ஜமகாண்டி மற்றும் ராமநகரா ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று லோக்சபா தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பா.ஜ.க வசமும், 1 தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த 3 லோக்சபா மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 4 தொகுதியில் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

வெற்றி

 

கடந்த 2004-ம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்லாரி தொகுதி இம்முறை காங்கிரஸ் வசமானது. காங்கிரஸின் வி.எஸ்.உகரப்பா, பாஜக-வின் சாந்தாவைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெல்லாரி தொகுதியில் 1,98,340 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது  இது கடுமையான சரிவாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ஸ்ரீராமலு, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றியை நிலைநாட்டியுள்ளது.  இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது. பெல்லாரி பகுதியில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடைசியாக நடந்த தேர்தலில் இந்த 8-ல் 6 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸின் சோனியா காந்தியும், பா.ஜ.க-வின் சுஷ்மா சுவராஜும் பெல்லாரியிலிருந்து போட்டியிட்டனர். அப்போது சோனியா வெற்றி பெற்றார் என்பது கூடுதல் தகவல்.