வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (07/11/2018)

கடைசி தொடர்பு:07:26 (07/11/2018)

டிராவிட்டின் பொறுமை... சித்துவின் அதிரடி... - ரிசர்வ் வங்கிக்கு ரகுராம் ராஜன் ஸ்மார்ட் அட்வைஸ்!

ராகுல் டிராவிட் போல் ரிசர்வ் வங்கி பொறுமையுடன் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் என அதன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், இதனைத் தர மறுத்ததால் இருதரப்பு இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களைத் தெரிவிக்காத விவகாரத்தில் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கிக்கும், அதன் கவர்னர் உர்ஜித் படேலுக்கும் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ``நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனையுடன் மத்திய அரசு செயல்படும். ஆனால், அதேநேரம் நிதிச் சந்தையை ஸ்திரமாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. இதனால் மத்திய அரசின் கோரிக்கையை, கருத்தை ரிசர்வ் வங்கி ஏற்காமல் மறுக்க முடியும். மத்திய அரசு தான் கார் டிரைவர் என்றால், ரிசர்வ் வங்கி தான் டிரைவரை பாதுகாக்கும் 'சீட் பெல்ட்' ஆகும். சீட் பெல்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான். சீட்  பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டினால், விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்" என்று கூறியவர், ``

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பொறுமையாக நின்று விளையாடி, அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். அதுபோல, ரிசர்வ் வங்கி கொள்கைகளை மாற்றாமல் சிந்தையுடன் செயல்பட வேண்டும். இதேபோல் நவ்ஜோத் சித்து அதிரடி ஆட்டம் ஆடி ரசிகர்களைக் கவர்வார். அவரை மத்திய அரசுடன் ஒப்பிடலாம். அதிரடி ஆட்டத்தின் சாதக, பாதகத்தைக் கணிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் உறுப்பினர்கள் மாற்றம் கவலை தருகிறது. நாம் சிறந்த போர்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம். உறுப்பினர்கள் அனைவரும் நல்லவர்கள். இவர்களால் பாலமாக இருந்து விரைவில் இந்த மோதல்கள், வேறுபாடுகளைக் களைவார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க