வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:08:30 (07/11/2018)

இந்தியாவில் தீபாவளி கொண்டாடிய தென் கொரிய முதல் பெண்மணி!

உத்தரப்பிரதேசத்தில் நேற்று தீப உற்சவம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய முறைப்படி தீபாவளி கொண்டாடியுள்ளார் தென் கொரிய அதிபரின் மனைவி. 

தென் கொரியா

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மூன்று நாள்களுக்குத் தீப உற்சவம் விழா நடைபெறுவது வழக்கம். நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லி வந்திறங்கினார் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜாங் அபே. பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து, நேற்று மாலை அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவில் கலந்துகொண்டு இந்திய முறைப்படி தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்தார். மேலும், அயோத்தி இளவரசி சூரிரத்னா தென்கொரியாவுக்குச் சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரைத் திருமணம் செய்துகொண்டார் என வரலாறு கூறுகிறது. பின்னர் சூரி ரத்னா, ஹர் ஹூவாங் ஓக் என அழைக்கப்பட்டார். அவரின் நினைவாக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தைத் தென் கொரிய அதிபரின் மனைவி திறந்துவைத்தார்.  சுமார் 3,01,152 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற்ற பிரமாண்ட தீப உற்சவம் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.