`சினிமா ஷூட்டிங்’ - ஜெர்மனி செல்ல அனுமதி கோரும் நடிகர் திலீப்! | actor dileep seeks permission from court to go to germany for cinema shooting

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (07/11/2018)

`சினிமா ஷூட்டிங்’ - ஜெர்மனி செல்ல அனுமதி கோரும் நடிகர் திலீப்!

சினிமா ஷூட்டிங் நடக்க இருப்பதால் 45 நாள்களுக்கு ஜெர்மனி செல்ல அனுமதிக்க வேண்டும் என நடிகர் திலீப், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சினிமா ஷூட்டிங் - வெளிநாடுசெல்லும் திலீப்

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கேரள நடிகை ஒருவர் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் திரிச்சூரில் இருந்து திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரைக் கடத்தியது. அந்தக் கும்பல் அவரை அடித்து உதைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதுடன், அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தது. கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஷூட்டிங் ஸ்பாட்டில் டிரைவராக வேலை செய்த பல்சர் சுனில் என்பவரைக் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் திலீப் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 300 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் உரையாடல் உள்ளிட்ட 400 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட நிலையில், விசாரணை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் தன்னை ஜெர்மனிக்குச் செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 30-ம் தேதி வரையிலும் ஜெர்மனியில் சினிமா ஷூட்டிங் செல்ல இருப்பதால் தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை அரசுத் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. 

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ``இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை தாமதிக்கும் செயல்களில் திலீப் தரப்பு இறங்கியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து விசாரணை தொடங்க விடாமல் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டது. இதுபோன்று தொடர்ச்சியாக விசாரணையில் தாமதம் செய்வது என்பது பாதிக்கப்பட்ட நடிகைக்கு இழைக்கப்படும் அநீதியாக அமைந்துவிடும். 

தற்போது நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டிருக்கிறார். இதுவும் கூட வழக்கு விசாரணையை தாமதிக்கும் செயலாகவே உள்ளது. அதனால் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி கொடுக்கக் கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளில் அனேகர் சினிமா துறையைச் சார்ந்தவர்கள். அவருடன் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் குறித்த விவரம், தங்குமிடம் குறித்த தகவல் எதையும் திட்டமிட்டே தெரிவிக்கவில்லை. வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவரை வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.