வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:50 (07/11/2018)

ஒரு கிராமத்தில் நான்கே ஓட்டுகள்! - 15 கி.மீ நடக்கும் தேர்தல் அதிகாரிகள்

சத்தீஸ்கரில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் வெறும் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்குகாகத் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. 

சத்தீஸ்கர் கிராமம்

மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனவும் கடந்த மாதம் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி. ராவத் அறிவித்தார். 

சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 143-வது தொகுதியில் உள்ள கொரியா என்ற கிராமத்தில், நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர் அதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

‘தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாள், தேர்தல் அதிகாரிகள் அந்தக் கிராமத்துக்குச் சென்று நால்வரும் வாக்களிப்பதற்காக சிறிய கூடாரம் அமைக்க உள்ளனர். காட்டுப் பாதை, பாறைகள் கொண்ட பகுதி என மெயின் ரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு அதிகாரிகள் செல்ல உள்ளனர்’ என மாவட்டத் தேர்தல் அதிகாரி டுக்கா ( Dugga ) தெரிவித்துள்ளார்.