வெளியிடப்பட்ட நேரம்: 03:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:03:05 (08/11/2018)

`காய்கறிக்குள்ள வெடிய வச்சா அதுதான் பசுமை பட்டாசா?' - உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடுப்பான வர்த்தகர்கள்

 

வெடி

தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சில முடிவுகளைத் தெரிவித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பதும் டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்த முக்கியமான முடிவுகள். பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தீபாவளியன்று யாரும் உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்தது போலத் தெரியவில்லை அதற்காகப் பலர் மீது வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன. அதற்காகப் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதே போல டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் டெல்லியில் உள்ள வியாபாரிகள். டெல்லியில் உள்ள சதார் பஜார் பட்டாசு விற்பனைக்குப் பிரபலமான பகுதிகளில் ஒன்று. ஆனால் இந்த முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. எனவே வர்த்தக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி பசுமை பட்டாசு என்றால் என்ன என்பது பற்றி உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதற்காக நூதனமான முறையில் பச்சை காய்கறிகளுக்குள் சாதாரண பட்டாசுகளை வைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் வியாபாரிகள்.

"எங்களுக்குப் பசுமை பட்டாசு என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி ஒன்று சந்தையில் இல்லவே இல்லை" என்கிறார் சதார் பஜார் வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சாப்ரா. நாங்கள் ஒன்றும் மாசு குறைவாக உள்ள பட்டாசுகளுக்கு எதிரிகள் அல்ல அதே நேரத்தில் அந்த வகை பட்டாசுகள் சந்தையில் இருக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு முன்னரே உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். வெடிக்கும்போது குறைவான மாசை வெளிப்படுத்துபவற்றைப் பசுமை பட்டாசுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவை இன்னும் பரிசோதனை நிலையில்தான் இருக்கிறது என்றும், முழுமையான தயாரிப்பிற்கு இன்னும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.