வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:36 (08/11/2018)

50 தையல்கள்; உயிருக்குப் போராட்டம்!- சிறுமியின் வாயில் ஆட்டம் பாமை வெடித்த உ.பி வாலிபர்!

உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் 3 வயதுச் சிறுமியின் வாயில் பட்டாசு பற்ற வைத்த முட்டாள்தனமான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் உத்தரபிரதேசத்தில் நடப்பது புதிதல்ல. 
 

ஆட்டம் பாம்
 

உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள மில்லக் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரின் மூன்று வயது மகள் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு வீட்டு வாசலில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அங்குப் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்பால் என்னும் இளைஞர் சசிகுமாரின் 3 வயதுக் குழந்தையிடம் விளையாடியவாறே ஆட்டம் பாமை எடுத்து அந்தக் குழந்தையின் வாயில் வைத்தார். சுற்றியிருந்தவர்கள் யாரும் இதைக் கவனிக்கவில்லை. குழந்தையின் வாயில் பட்டாசு வைத்தது மட்டுமன்றி அதன் திரியைப் பற்ற வைத்துவிட்டு ஓடிவிட்டார். ஆட்டம் பாம் வெடித்து குழந்தையின் முகம் சிதைந்தது. குழந்தை வலியில் துடித்து அலறியது. வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், குழந்தையை அருகில் இருந்த மருத்துமனையில் அனுமதித்தனர். 

குழந்தை

Image Courtesy - Jagran

குழந்தையின் முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தொண்டையிலும் பலத்த காயம். குழந்தையின் வாய்ப்பகுதியில் மட்டும் 50 தையல்கள் போடப்பட்டன. குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில்தான் உள்ளது. 

குழந்தையின் வாயில் பட்டாசு வைத்த ஹர்பால் தலைமறைவாகிவிட்டார். அந்த இளைஞர் மீது குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து, ஹர்பாலைத் தேடி வருகிறது. ஹர்பாலின் நண்பர்களிடம் விசாரித்ததில் `குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாட்டுக்காக ஆட்டம் பாமை குழந்தையின் வாயில் வைக்கிறார் என்று நினைத்தோம். திரியைப் பற்ற வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

உ.பி-யில் நடக்கும் இதுபோன்ற முட்டாள்தனமான சம்பவங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க