வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:55 (08/11/2018)

`மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பு..!’ - ராஜினாமா செய்கிறாரா உர்ஜித் படேல்?

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்துவரும் பனிப் போரின் முடிவாக, ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உர்ஜித் படேல்

கடந்த சில நாள்களாகவே மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடுமையான பனிப் போர் நடந்துவருகிறது. கடந்த மாத இறுதியில், மும்பையில் நடந்த ‘ஏ.டி.ஷெராப் நினைவு’ நிகழ்ச்சியில் பேசிய மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ‘ஒரு நாட்டின் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்' என்று தெரிவித்தார். சமீப காலத்தில் ஆர்பிஐ தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு யாரும் பேசியதில்லை என்பதால், விராலின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இங்குதான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. 

சமீபத்தில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு  3 கோரிக்கைகளை விடுத்தது. நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்புப் பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது மூன்றில் ஒரு கோரிக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கிமீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியைப் பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசின் இந்த அழுத்தத்தினால், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகப் பல தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில், படேல் ராஜினாமா செய்வார் என அவரின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மணிலா என்ற இணையப் பொருளாதார ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மத்திய அரசுடனான பிரச்னையால் உர்ஜித் படேல் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.