வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:55 (08/11/2018)

`கிங் கோலி’ கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள் - சித்தார்த் அட்வைஸ்

இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்

களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படும் விராட் கோலி இந்த முறை சமூகவலைதளத்தில் காட்டமாகத் தெரிவித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில், விராட் கோலியை எல்லாம் வியந்து பார்க்கிறார்கள். அவரின் பேட்டிங்கில் சிறப்பு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்திய பேட்ஸ்மேன்களைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட கோலி, `இந்தக் கருத்தைத் தெரிவித்தவர், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்கேயாவது சென்று வசிக்கலாம்; வாழலாம்’ என அதிரடியாகக் கூறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் தனது ட்விட்டரில், ``கிங் கோலி என்ற அடைமொழியை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார். என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.