மேற்குவங்க நிதி நிறுவன மோசடி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தொடர்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மோசடி செய்த சாரதா என்ற சீட்டு குழும நிதி நிறுவனத்தின் மோசடிக்கு துணைபோக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகளுக்கு தாம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக அந்நிறுவனத்தின் தலைவர்  சுதிப்தா சென், சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் சீட்டு பிடிப்பதாக கூறி பல லட்சம் வாடிக்கையாளர்களின் பணத்தை பெற்ற சாரதா நிதி நிறுவனம், திவாலானதாக கூறி மூடப்பட்டுவிட்டது.அந்நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென், தலைமறைவானதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுதிப்தா சென் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுதிப்தா சென்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாரதா குழுமத்துக்கு சொந்தமான 35 வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க அரசு முடக்கியுள்ளது. மேலும், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 36 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4 அலுவலகக் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு, பல ஏக்கர் மதிப்புள்ள நிலத்துக்கான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தொடர்பு

இதனிடையே சிபிஐ-க்கு சுதிப்தா சென் எழுதியுள்ள கடிதத்தில் தனது நிதி நிறுவனத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புள்ளிகள் ஆரம்பத்தில் ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு மாநில மற்றும் மத்திய அரசிலிருந்து எவ்வித பிரச்னைகளும் வராமல் பார்த்துக்கொள்வதாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தம்மிடமிருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!