வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (08/11/2018)

இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை 6.9% உயர்வு!

கடந்த ஆண்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை 2.16 கோடியாக இருந்தது. தற்போது வேலை தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. இளைஞர்களின் மொத்த எண்ணிக்கையில் 42.4 சதவிகிதம் பேர் வேலை செய்ய ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

2018 அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை 6.9% ஆக உயர்ந்து இருப்பதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே உச்சபட்ச அளவாகும்.

வேலை வாய்ப்பு

2018, அக்டோபர் மாதக்கணக்கீட்டின்படி 39.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். ஆனால், கடந்த 2017, அக்டோபர் மாதக் கணக்கீட்டில் 40.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். இதோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 2.4 சதவிகிதம் குறைவாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.அதேபோல, கடந்த ஆண்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை 2.16 கோடியாக இருந்தது. தற்போது வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. இளைஞர்களின் மொத்த எண்ணிக்கையில் 42.4 சதவிகிதம் பேர் வேலை செய்ய ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைக்குச் செல்பவர்களில் 82 சதவிகிதம் ஆண்களும், 92 சதவிகிதம் பெண்களும், 10,000 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் என்று அசீம் பிரேம்ஜி யுனிவர்சிட்டி வெளியிட்ட 'ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இந்தியா 2018' கணக்கீட்டின்படி தெரிய வருகிறது. சமீபகாலத்தில், ஊதிய வளர்ச்சி குறைந்துள்ளதால் இந்தியாவின் குறைந்த வருவாய் சிக்கல் தொடர்ந்து வருகிறது.