இந்தியாவிலேயே டூ வீலர், பேருந்துப் பயன்பாட்டில் சென்னைக்கு முதலிடம்! | Highest number of two wheelers in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (09/11/2018)

இந்தியாவிலேயே டூ வீலர், பேருந்துப் பயன்பாட்டில் சென்னைக்கு முதலிடம்!

இந்தியாவிலுள்ள பெருநகரங்களிலேயே, இருசக்கர வாகனங்கள் அதிகப் பயன்பாட்டில் இருப்பதில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. இதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தி, அரசுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் இந்தியாவிலேயே சென்னைதான் முதலிடத்தில் இருக்கிறது.

டெல்லியிலுள்ள மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விரண்டு தகவல்களுமே இருக்கின்றன. அறிக்கையை வெளியிட்டவர், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. அறிக்கையிலுள்ள சுவாரஸ்யமான முரண் என்னவென்றால், இருசக்கர வாகனப் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கும் சென்னைதான், அரசுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. 

சென்னை அரசுப் போக்குவரத்து

மேலும் அந்த அறிக்கையில், சென்னையிலுள்ள 75 சதவிகித மக்கள் அரசுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன், சென்னையிலுள்ள ஓர் அரசுப் பேருந்து, ஒரு நாளுக்கு 1,300 பயணிகளை அழைத்துச்செல்கிறது எனச் சொல்லும் இவ்வறிக்கை, இந்தியாவிலேயே ஒரு அரசுப் பேருந்து ஒரு நாளுக்கு இத்தனை பேருக்குப் பயன்படுவது சென்னையில்தான்  என்கிறது. 

சென்னையில், பேருந்துப்  பயன்பாடு மற்றும் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதற்கு, நிறையப் பேரை உள்ளடக்கக்கூடிய இடவசதி,  டிக்கெட் விலை, உடனுக்குடன் பயணிகளை அணுகக்கூடியதாகப் பேருந்துகள் இயங்கும் முறை ஆகியன சாதகமாக இருக்கின்றன. 

சென்னைவாசிகளுக்கு இது பெருமைப்படும் விஷயமாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளை அரசு எப்போதுதான் முழுவதுமாக முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருமோ என்கிற ஆற்றாமையும் இல்லாமலில்லை.